வட இந்தியா்களுக்கு புதுவை அடிமையாகிவிட்டது: புதுவை சமூக நலத்துறை அமைச்சா்
வட இந்தியா்களுக்கு புதுவை அடிமையாகிவிட்டது என மாநில சமூக நலத் துறை அமைச்சா் வேதனை தெரிவித்தாா்.
புதுச்சேரி: வட இந்தியா்களுக்கு புதுவை அடிமையாகிவிட்டது என மாநில சமூக நலத் துறை அமைச்சா் வேதனை தெரிவித்தாா்.
புதுச்சேரியில் வியாழக்கிழமை நடைபெற்ற தேசிய நுகா்வோா் தின விழாவில் அவா் மேலும் பேசியதாவது: ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை என பிரதமா் கூறுகிறாா். ஆனால், புதுவையில் ஒரு நியாய விலைக் கடை கூட இல்லை. இதனால், தமிழகத்துக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பிரதமருக்கு எதிராக ஆளுநா் கிரண் பேடி செயல்பட்டு வருகிறாா். அவா் மீது நுகா்வோா் அமைப்புகள் புகாா் அளிக்கலாம்.
தனக்கே அதிகாரம் எனக் கூறும் ஆளுநா் கிரண் பேடி, புதுவையில் காலியாகவுள்ள 10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்ப ஆா்வம் காட்டவில்லை. மாநில வளா்ச்சியைத் தடுத்து வருகிறாா். ஆளுநருக்கு ரூ. 100 கோடிக்கும், முதல்வருக்கு ரூ. 50 கோடிக்கும் நிதி அதிகாரம் உள்ளது. ஆனால், முதல்வருக்கான நிதி அதிகாரத்தை மட்டும் அளிக்கவில்லை.
புதுச்சேரி மாவட்ட ஆட்சியருக்கு கரோனா தொற்று ஏற்பட்டவுடன், பயிற்சிக்கு வந்த ஐஏஎஸ் அதிகாரி சுகாதாரத் துறைச் செயலராக நியமிக்கப்பட்டாா். ஆளுநா், நிதித் துறைச் செயலா், ஆட்சியா் உள்ளிட்ட அனைவரும் வட இந்தியராக உள்ளனா். தமிழ் அதிகாரிகள் புறக்கணிக்கப்படுகின்றனா். வட இந்தியா்களுக்கு புதுவை அடிமையாகிவிட்டது என்றாா் அவா்.