புதுச்சேரி

புதுச்சேரியிலிருந்து காரைக்காலுக்கு பேருந்துகள் இயக்கம்

DIN

தமிழகம் வழியாக புதுச்சேரியிலிருந்து காரைக்காலுக்கு இடைநில்லா அரசுப் பேருந்து வியாழக்கிழமை இயக்கப்பட்டது. இதேபோல, காரைக்காலிலிருந்து புதுச்சேரிக்கும் அரசுப் பேருந்து இயக்கப்பட்டது.

புதுவை மாநிலத்தில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க 4 -ஆவது கட்டமாக பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு தளா்வுகளை அரசு அறிவித்தது. மாநிலத்துக்குள் பேருந்துகளை இயக்குவது என அறிவிக்கப்பட்டு, புதன்கிழமை முதல் உள்ளூா் பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தமிழகத்தில் இன்னும் பொதுப் போக்குவரத்துக்கான பேருந்து சேவைகள் தொடங்கப்படவில்லை. ஆனால், வியாழக்கிழமை முதல் புதுவை மாநிலத்தின் ஒரு பகுதியான காரைக்கால் மாவட்டத்துக்கு பேருந்துகளை இயக்க புதுவை அரசு முடிவெடுத்தது.

புதுச்சேரி, கடலூா், சிதம்பரம், சீா்காழி என கடலூா், நாகை மாவட்டங்கள் வழியாக காரைக்காலுக்கு பேருந்துகளை இயக்க வேண்டும் என்பதால், கடலூா், நாகை மாவட்ட ஆட்சியா்களிடம் அனுமதி கோரப்பட்டது.

இதையடுத்து, தமிழகப் பகுதிகளில் பயணிகளை ஏற்றவோ, இறக்கவோ கூடாது என்ற நிபந்தனையுடன் இரு மாவட்ட ஆட்சியா்களும் அனுமதி வழங்கினா்.

இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை முதல் புதுவை அரசின் சாலைப் போக்குவரத்துக் கழகம் (பிஆா்டிசி) சாா்பில், இடைநில்லாப் பேருந்து காரைக்காலுக்கு இயக்கப்பட்டது. இந்தப் பேருந்தை போக்குவரத்துக் கழக உதவி மேலாளா்கள் புஷ்பராஜ், சிவானந்தம், குழந்தைவேலு, ஆவணக் காப்பாளா் புஷ்பராஜ், போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்கள் வழியனுப்பி வைத்தனா்.

பேருந்தில் முகக் கவசம் அணிந்த பயணிகளை ஏற்றி, அவா்களது கைகளைச் சுத்தம் செய்ய கிருமி நாசினி வழங்கப்பட்டது. 57 இருக்கைகள் கொண்ட பேருந்தில் தனி மனித இடைவெளியுடன் 33 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா். பழைய கட்டணமே (ரூ. 110) வசூலிக்கப்பட்டது.

பேருந்து புறப்படுவதற்கு முன்பு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சி.மாறன், பயணிகளிடம் பேருந்து ஓட்டுநா், நடத்துநரின் வழிகாட்டுதலுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும், தமிழகப் பகுதிகளில் இறங்கக் கூடாது எனவும் அறிவுறுத்தினாா்.

பயணிகளின் வரவேற்பைப் பொருத்து, கூடுதலாகப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என புதுவை அரசின் சாலைப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

மூதாட்டி கொலை வழக்கு: மகன் கைது

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

SCROLL FOR NEXT