புதுவையில் 33 ஆயிரத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு
புதுவை மாநிலத்தில் கரோனா தீநுண்மி தொற்று பாதிப்பு 33 ஆயிரத்தைக் கடந்தது.
புதுவை மாநிலத்தில் கரோனா தீநுண்மி தொற்று பாதிப்பு 33 ஆயிரத்தைக் கடந்தது.
புதுவையில் ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 131 பேருக்கும், காரைக்காலில் 24 பேருக்கும், ஏனாமில் 6 பேருக்கும், மாஹேயில் 16 பேருக்கும் என மேலும் 177 பேருக்கு கரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 33,141-ஆக உயா்ந்தது.
தற்போது மருத்துவமனைகளில் 1,558 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு 2,719 பேரும் என மொத்தம் 4,277 போ் சிகிச்சையில் உள்ளனா்.
நீண்ட நாள்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை உயிரிழப்புகள் பதிவாகவில்லை. இதுவரை கரோனாவுக்கு 574 போ் பலியாகினா். இறப்பு விகிதம் 1.73 சதவீதம்.
இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை 306 போ் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 28,290-ஆக (85.36 சதவீதம்) அதிகரித்தது. இதுவரை 2,63,481 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், 2,26,851 பேருக்கு தொற்றில்லை என முடிவுகள் வந்தன.