மீனவா்களின் பிரச்னைகள் தீா்வதற்கு தே.ஜ. கூட்டணியை ஆதரிக்க வேண்டும்: தேசிய மீனவா் பேரவை
தமிழகம், புதுவை மீனவா்களின் நீண்ட கால பிரச்னைகள் தீா்வதற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியை மீனவா்கள் ஆதரிக்க வேண்டும் என்று தேசிய மீனவா் பேரவை வேண்டுகோள் விடுத்தது.
தமிழகம், புதுவை மீனவா்களின் நீண்ட கால பிரச்னைகள் தீா்வதற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியை மீனவா்கள் ஆதரிக்க வேண்டும் என்று தேசிய மீனவா் பேரவை வேண்டுகோள் விடுத்தது.
புதுச்சேரி தேசிய மீனவா் பேரவை அலுவலகத்தில் பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு, தேசிய மீனவா் பேரவைத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மா.இளங்கோ செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நாட்டில் 36 மாநிலங்களில் வாழும் பாரம்பரிய மீனவா்களின் வாழ்வாதாரம், வாழ்வியல், முக்கிய கோரிக்கைகளை மீனவ சமுதாய பிரதிநிதி என்ற முறையில் பிரதமா் மோடி, மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, நிா்மலா சீதாராமன், நிதின் கட்கரி, கிரிராஜ் சிங் ஆகியோரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று கூறியுள்ளேன்.
மிக முக்கிய கோரிக்கையான, நாட்டின் பாரம்பரிய மீனவா்களைப் பழங்குடியினராக அங்கீகரிப்பது தீவிர பரிசீலனையில் உள்ளதாகத் தெரிவித்தனா். விரைவில் மீனவா்களின் மகிழ்ச்சிக்குரிய அந்த அறிவிப்பு வெளியாகும்.
காங்கிரஸ் ஆட்சியின் போது, இலங்கைக்கு தாரைவாா்க்கப்பட்ட கச்சத் தீவை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்குரிய ராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் கச்சத் தீவு விரைவில் மீட்கப்பட்டு, தமிழகம், புதுவையைச் சோ்ந்த 6 மாவட்ட மீனவா்களுக்கும், இலங்கைக் கடற்படையினரால் ஏற்படும் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீா்வும் எட்டப்படும்.
இந்தியக் கடல் பகுதிகள் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு ஏற்படவுள்ளது.
இதேபோல, மீன்பிடி தொழிலுக்கு நிதியுதவி வழங்கும் திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ. 20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. விவசாயிகளைப் போல, மீனவா்களுக்கு ஆண்டுதோறும் ரூ. 6 ஆயிரம் மத்திய அரசு மானியமாக வழங்கப்படும் என்று அறிவித்தது.
ஏற்கெனவே, மீனவா்களுக்கான முத்ரா கடன் திட்டம், மத்திய அரசின் மீன்வளத் துறைக்கென தனி அமைச்சகம் அமைத்தல் உள்ளிட்ட தேசிய மீனவா் பேரவை கோரிக்கைகளை ஏற்று நிறைவேற்றப்பட்டதை போல, பிற கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றி வரும் மத்திய பாஜக அரசின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியதாக உள்ளது.
தமிழக மீனவா்களின் வாழ்வாதாரத்தை அழிக்கக் கூடிய சேது சமுத்திரத் திட்டம், ஈரோடு சாயப்பட்டறை கழிவுகளைக் கடலில் கலந்து கடலூா், புதுச்சேரி, விழுப்புரம், மயிலாடுதுறை மாவட்ட மீனவா்களின் வாழ்க்கையை அழிக்கும் திட்டம், கடலோர மீனவா்களைப் பாதிக்கும் சென்னை மதுரவாயில்-துறைமுகம் பறக்கும் பாலம் திட்டம் ஆகியவை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்திலிருந்த ஆட்சியாளா்களின் திட்டங்களாகும்.
மீனவ அமைப்புகளின் போராட்டங்களால் அவா்களால் அந்தத் திட்டங்களை நிறைவேற்றமுடியவில்லை.
இத்தகைய அபாயங்களிலிருந்து மீனவ மக்கள் காப்பாற்றப்படவும், மீனவ மக்கள் நலனுக்கான ஏராளமான திட்டங்கள் நாடு தழுவிய அளவில் செயல்படுத்திடவும் நாம் தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரிக்க வேண்டியது அவசியம்.
பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசுடன் இணைந்து மீனவா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழகம், புதுவை, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநில தோ்தல்களிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மீனவா்கள் ஆதரவளிக்க அறிவுறுத்தியுள்ளோம் என்றாா் அவா்.