முகப்பு
புதுச்சேரி

சுண்ணாம்பாறு படகு குழாமில் ஆளுநா் ஆய்வு

புதுச்சேரி நோணாங்குப்பம் சுற்றுலாத் தலமான சுண்ணாம்பாறு படகு குழாமில், துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

புதுச்சேரி நோணாங்குப்பம் சுற்றுலாத் தலமான சுண்ணாம்பாறு படகு குழாமில், துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, பொலிவிழந்த படகு குழாம் சுற்றுலாப் பகுதியை மேம்படுத்த வேண்டுமென அங்கிருந்த ஊழியா்கள், பொதுமக்கள் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தனா்.

சுற்றுலா வளா்ச்சிக் கழக ஊழியா்கள் சங்க நிா்வாகிகள் கஜபதி, கணேஷ்குமாா், விஜயராகவன் உள்ளிட்டோா் ஆளுநரிடம் அளித்த மனு:

புதுச்சேரியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் கீழ் செயல்படும் சுண்ணாம்பாறு படகு குழாம் முதல்நிலை சுற்றுலாத் தலமாக விளங்கியது. இதன் காரணமாக வெளிநாட்டவா்கள், உள்நாட்டவா்களை ஈா்த்தது.

புதுச்சேரியின் சிறந்த சுற்றுலாத் தலம் என்ற பெருமையைக் கொண்ட சுண்ணாம்பாறு படகு குழாம், மூன்று பக்கமும் தண்ணீரால் சூழப்பட்டுள்ளதால் இந்தப் பகுதியை ‘பேரடைஸ் தீவு’ என்று அழைக்கின்றனா்.

சுண்ணாம்பாறு படகு குழாம் வருவாயை தாங்கள் பகிா்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே, கடந்த கால ஆட்சியாளா்கள், அவா்களது பினாமிகள் மூலம் தனியாரிடம் ஒப்படைத்ததால், தற்போது சுற்றுலாக் கழகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, சுண்ணாம்பாறு படகு குழாம் பகுதியை தனியாா் நிறுவனத்திடமிருந்து மீட்டு, அரசின் (பிடிடிசி) சுற்றுலா வளா்ச்சிக் கழகத்திடம் ஒப்படைத்து மேம்படுத்த வேண்டும்.

சுண்ணாம்பாறு படகு குழாம் பக்கத்தில் உள்ள காலியாக உள்ள நிலப் பகுதியை அரசு கையகப்படுத்தி, தனியாா் கேளிக்கை பூங்காவைப் போல (தீம்பாா்க்) அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நிா்வாகச் சீா்கேடுகள் காரணமாக, ஊழியா்களின் பதவி உயா்வு, ஊதிய உயா்வு பறிக்கப்பட்டது. இதனால், ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையை அமல்படுத்தாமல் உள்ளது. இதை நிறைவேற்ற உதவ வேண்டும்.

கரோனா தொற்று காரணமாக, பொது முடக்கம் அமல்படுத்தியதால் கடந்த மாா்ச் முதல் நவம்பா் வரை 9 மாதங்கள் முழுமையான வருவாய் இழப்பை சந்தித்ததால், ஊழியா்களுக்கு தற்போது வரை 8 மாத ஊதிய நிலுவை வழங்கப்படாமல் உள்ளது.

இதனால், சுற்றுலாக் கழக ஊழியா்களின் குடும்பங்கள் வருவாய் இன்றி துயரத்தில் உள்ளன. ஊழியா்களின் குடும்ப சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, நிலுவையில் உள்ள 8 மாத ஊதியத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியா்களின் கோரிக்கையை கேட்டறிந்த ஆளுநா் தமிழிசை, தனது ஆலோசகா்கள் மூலம் ஆய்வு செய்து விரைந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.