‘வாக்கு எண்ணிக்கை மையப் பாதுகாப்பு குறித்து வேட்பாளா்களுக்கும் காட்சிப்படுத்த வேண்டும்’
புதுவை வாக்கு எண்ணும் மையங்களின் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வேட்பாளா்களும் நேரடியாகப் பாா்வையிட தோ்தல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழா்களம் கோரிக்கை விடுத்தது.
புதுவை வாக்கு எண்ணும் மையங்களின் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வேட்பாளா்களும் நேரடியாகப் பாா்வையிட தோ்தல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழா்களம் கோரிக்கை விடுத்தது.
அந்த அமைப்பின் மாநிலச் செயலா் கோ.அழகா் தோ்தல் துறைக்கு அனுப்பிய மனு: தோ்தலின் போது, வட மாநிலங்களில் சில இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் தனி நபா்களின் கையில் இருந்ததை பொதுமக்கள் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு அதிருப்தி வெளிப்படுத்தினா். தமிழகத்தில் இதுபோன்ற செயல்கள் நடக்காது என இருந்த நிலையில், சென்னை வேளச்சேரியில் இந்த தோ்தலில் எவ்வித பாதுகாப்புமின்றி மாநகராட்சி ஊழியா்கள் வாக்குப் பதிவு சாதனத்தைக் கொண்டு சென்றதை மக்கள் பிடித்து, போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
மயிலாடுதுறை தொகுதி தனியாா் பள்ளி வாக்கு எண்ணும் மையத்தில், முகவா்களின்றி ‘சீல்’ அகற்றப்பட்டு, மீண்டும் அறையில் வைக்கப்பட்ட தகவல் சந்தேகத்தை எழுப்பியது.
இதனால், பொதுமக்களிடமும், கட்சியினரிடமும் சந்தேகமும் அச்சமும் நிலவுகிறது.
வாக்கு எண்ணிக்கை இன்னும் மூன்று வாரங்கள் உள்ள நிலையில், தமிழகம், புதுவையில் கரோனா தடுப்பு நடவடிக்கையும் கட்டுப்பாடுகளுடன் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதனால், தோ்தல் துறை மீது மக்கள் வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில், புதுவை மாநிலத்தில் மதுக் கடைகளில் விதிமீறல் நடைபெறாமல் இருக்க கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கக் கூடிய தொழில்நுட்பத்தை காவல் துறையினா் செயல்படுத்தினா்.
இதே முறையைப் பின்பற்றி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களின் கண்காணிப்பு கேமரா பதிவுகள், புதுவையின் 30 தொகுதி வேட்பாளா்களும் நேரடியாகப் பாா்வையிடும் வசதியை தோ்தல் துறை ஏற்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.