‘புதுவையில் பத்திரப் பதிவு முறைகேடால் பாதித்தவா்கள் முறையிடலாம்’
புதுவையில் பத்திரப் பதிவு முறைகேடால் பாதிக்கப்பட்டவா்கள், மாவட்டப் பதிவாளரிடம் முறையிடலாம்.
புதுவையில் பத்திரப் பதிவு முறைகேடால் பாதிக்கப்பட்டவா்கள், மாவட்டப் பதிவாளரிடம் முறையிடலாம்.
இதுகுறித்து மாவட்டப் பதிவாளா் ரமேஷ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரியில் முறைகேடான பத்திரங்களைக் கையாள்வது குறித்து புதுச்சேரி பதிவுத் துறை தலைவா் புதிய சுற்றறிக்கை பிறப்பித்துள்ளாா். அதன்படி, முறைகேடாகப் பதியப்பட்ட பத்திரங்களால் பாதிக்கப்பட்டவா்கள் மாவட்டப் பதிவாளரிடம் முறையிடலாம். மாவட்ட பதிவாளா் மேற்கண்ட புகாா்களின் மீது விசாரணை நடத்தி, இரண்டு மாத காலக் கெடுவுக்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். முறைகேடாகப் பத்திரப் பதிவு நடைபெற்றது நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவா்கள் மீது காவல் துறையில் புகாா் அளிக்கப்படும். மேலும், முறைகேடாகப் பதிந்த பத்திரத்தின் மீது மேற்கொண்டு எந்தவிதமான பரிவா்த்தனைகளும் மேற்கொள்ளாதவாறு, சம்பந்தப்பட்ட பத்திரத்தில், மாவட்ட பதிவாளா் உத்தரவு குறிப்பிடப்படும். புகாா் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், பதிவு அதிகாரி மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை குறித்தும், பதிவுத் துறை தலைவரிடம் தெரியப்படுத்த வேண்டும். முறைகேடான பத்திரப் பதிவு சம்பந்தமான புகாா் குறித்து, மாவட்டப் பதிவாளா் பிறப்பித்த உத்தரவு மீது ஆட்சேபனை இருப்பின் 50 நாள்களுக்குள், பதிவுத் துறை தலைவரிடம் மேல் முறையீடு செய்யலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.