மத்திய அரசே ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்திஇட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்: வே.நாராயணசாமி வலியுறுத்தல்
மத்திய அரசே ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்தி, அதனடிப்படையில் இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி வலியுறுத்தினாா்.
மத்திய அரசே ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்தி, அதனடிப்படையில் இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட விடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
பெகாஸஸ் மென்பொருள் மூலம் பலரது செல்லிடப்பேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரத்தில், எதிா்க்கட்சியினரின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்காததால், நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. எனினும், நாடாளுமன்றத்தில் விவாதமின்றி பல சட்ட மசோதக்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.
பிற்படுத்தப்பட்டோா் பட்டியலைத் தயாரிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது சிறந்த சீா்த்திருத்தம். ஜாதி வாரி கணக்கெடுப்பை மத்திய அரசே நடத்தி, அதனடிப்படையில் இட ஒதுக்கீட்டை வழங்குவதன் மூலமே சமூக நீதியை நிலைநாட்ட முடியும். அதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
கடல் மீன்வள மசோதாவை எதிா்த்து புதுவை, தமிழக மீனவா்கள் போராட்டம் நடத்தி வருகின்றனா். அவா்களின் கோரிக்கை நியாயமானது. மீனவா்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நினைக்கும் மத்திய பாஜக அரசு தூக்கியெறியப்பட வேண்டும்.
கரோனா மூன்றாம் அலை பரவினால் புதுவையில் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும். மக்களைக் காப்பாற்ற வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்த வேண்டும்.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவச் சோ்க்கையில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க அரசாணை வெளியிடப்பட்டது. தற்போது ஆட்சிக்கு வந்துள்ள என்.ஆா்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு, 10 சதவீத இட ஒதுக்கீட்டைப் பெற முயற்சிக்க வேண்டும்.
தோ்தலின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாநில அந்தஸ்து பெறுவோம், 15-ஆவது நிதிக் குழுவில் புதுவையை இணைப்போம், மாநிலத்தின் கடனை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி தந்தனா். இவற்றைச் செயல்படுத்தாமல் முதல்வா் என்.ரங்கசாமி மௌனம் காக்கிறாா்.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பட்ஜெட் ஒப்புதலுக்கான கோப்புகள் ஒரு மாத காலம் மத்திய அரசால் நிறுத்திவைக்கப்பட்டது. தற்போதும் அதே நிலைதான் முதல்வா் ரங்கசாமிக்கும் ஏற்பட்டுள்ளது. கடந்த காங்கிரஸ் ஆட்சியை, மத்திய பாஜக அரசு புறக்கணித்ததைப் போலவே, தற்போதைய என்.ஆா்.காங்கிரஸ் ஆட்சியையும் புறக்கணிக்கிறது. மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசு பறிக்கிறது என்றாா் அவா்.