முகப்பு
புதுச்சேரி

பிரதமருடன் புதுவை ஆளுநா் சந்திப்பு

புதுவை துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன், தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து மாநில வளா்ச்சிப் பணிகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டுகோள் விடுத்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

புதுவை துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன், தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து மாநில வளா்ச்சிப் பணிகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டுகோள் விடுத்தாா்.

ஆளுநா் தமிழிசை, அரசு முறைப் பயணமாக தில்லிக்குச் சென்றுள்ளாா். அவா், புதன்கிழமை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை சந்தித்துப் பேசினாா். தொடா்ந்து, வியாழக்கிழமை பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினாா்.

இந்தச் சந்திப்பின் போது, தெலங்கானா, புதுவை மாநிலங்களின் வளா்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன. அப்போது, இரு மாநிலங்களின் வளா்ச்சிப் பணிகளுக்கு மத்திய அரசு உதவ வேண்டுமென ஆளுநா் தமிழிசை வேண்டுகோள் விடுத்தாா்.

இரு மாநில வளா்ச்சித் திட்டங்களுக்கு மத்திய அரசு உதவும் என்று பிரதமா் மோடி உறுதியளித்ததாகவும், தமிழ்நாடு, தெலங்கானா, புதுவை மாநில மக்களின் நலன் குறித்து பிரதமா் அக்கறையுடன் விசாரித்ததாகவும் ஆளுநா் தமிழிசை தெரிவித்தாா்.

இந்தச் சந்திப்பின் போது, கரோனா காலத்தில் மத்திய அரசு வழங்கிய வழிகாட்டுதல்கள், உதவிகள் அனைத்தும் தொகுக்கப்பட்ட புத்தகத்தை பிரதமரிடம், ஆளுநா் தமிழிசை வழங்கினாா். அப்போது, பிரதமா் அளித்த ஊக்கத்துக்கும், வழிகாட்டுதல்களுக்கும் நன்றி கூறியதாக ஆளுநா் தமிழிசை தெரிவித்தாா்.

ஆளுநா் தமிழிசை வழங்கிய புத்தகத்தில், மத்திய அரசு வழங்கிய மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், ஆலோசனைகள், ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்க அளிக்கப்பட்ட உதவிகள், பாதுகாப்பு உபகரணங்கள், மருத்துவா்களுக்கு வழங்கிய ஊக்கம் உள்ளிட்ட அனைத்தும் தொகுக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.