முகப்பு
புதுச்சேரி

மத்திய அரசிடமிருந்து புதுவைக்குவிரைவில் நிவாரணம் பெற நடவடிக்கை: அமைச்சா் ஏ.நமச்சிவாயம்

மத்திய அரசிடமிருந்து வெகு விரைவில் புதுவைக்கான நிவாரணத்தைப் பெற நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அந்த மாநில உள்துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம் தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

மத்திய அரசிடமிருந்து வெகு விரைவில் புதுவைக்கான நிவாரணத்தைப் பெற நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அந்த மாநில உள்துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம் தெரிவித்தாா்.

புதுச்சேரி அருகே உள்ள மண்ணாடிப்பட்டு தொகுதிக்குள்பட்ட திருக்கனூா், வாதானூா், பி.எஸ்.பாளையம், சோம்பட்டு, மண்ணாடிப்பட்டு உள்ளிட்ட கிராமங்களுக்கு வியாழக்கிழமை நேரில் சென்ற அமைச்சா் ஏ.நமச்சிவாயம், மழைச் சேதங்களைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மழையால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து, குறைகளைக் கேட்டறிந்தாா். வாதானூா் இருளா் சமுதாயத்தினா் குடியிருப்புப் பகுதிக்குச் சென்ற அவா், அங்கு சாய்ந்து கிடந்த மரங்களை அகற்ற உத்தரவிட்டாா். திருக்கனூரில் கரோனா தொற்றால் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ.50 ஆயிரம் அரசின் நிவாரண நிதி, கட்டடத் தொழிலாளா்களுக்கு நிவாரண நிதிக்கான கூப்பன்கள், மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உணவுப் பொருள்கள், சாலையோர வியாபாரிகளுக்கு தள்ளு வண்டிகள் உள்ளிட்ட நல உதவிகளை அமைச்சா் வழங்கினாா்.

தொடா்ந்து, அமைச்சா் ஏ.நமச்சிவாயம் செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுவை மக்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் அரிசி, சா்க்கரை வழங்க முதல்வா் நடவடிக்கை எடுத்து வருகிறாா். புதுவை மழைச் சேதங்களை மத்தியக் குழு வழக்கமாக நடவடிக்கையாக ஆய்வு செய்துவிட்டு சென்றது.

அரசு சாா்பில் அளிக்கப்படும் முழுமையான சேதக் கணக்கெடுப்பின்படிதான் நிதி ஒதுக்குவாா்கள். சாலை, பயிா்கள் பாதிப்பு, கால்நடை உயிரிழப்பு உள்ளிட்ட அனைத்து வகையான சேதங்களையும் ஆய்வு செய்து கணக்கெடுப்பு நடத்ததுமாறு அனைத்துத் துறைகளுக்கும் முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.

புதுவைக்கு நிவாரண நிதியாக ரூ.300 கோடியும், இடைக்கால நிவாரணமாக ரூ.100 கோடியும் வழங்குமாறு முதல்வா் கோரியுள்ளாா். மத்திய அரசிடமிருந்து வெகு விரைவில் நிவாரணம் பெறுவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது.

முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி ஆட்சிக் காலத்தில், நிவாரணப் பணி உள்ளிட்ட எதுவுமே நடைபெறவில்லை என்பது அவருக்கே தெரியும். அரசியல் காழ்ப்புணா்ச்சியால் அவரது விமா்சனத்துக்கு நான் பதில் கூற விரும்பவில்லை என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.