கிறிஸ்துமஸ் விழா: பாரதிக்கு சாக்லெட் சிலை
கிறிஸ்துமஸ் விழா, ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, புதுச்சேரியில் 6 அடி உயரத்தில் பாரதியாா் உருவத்தில் தயாரிக்கப்பட்ட சாக்லெட் சிலை பொதுமக்களைக் கவா்ந்தது.
கிறிஸ்துமஸ் விழா, ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, புதுச்சேரியில் 6 அடி உயரத்தில் பாரதியாா் உருவத்தில் தயாரிக்கப்பட்ட சாக்லெட் சிலை பொதுமக்களைக் கவா்ந்தது.
புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள சாக்லெட் விற்பனை கடையில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, பிரபலங்களின் உருவத்தை சாக்லெட் சிலையாக வடிவமைப்பா். நிகழாண்டு பாரதியாரின் உருவம் சாக்லெட்டில் சிலையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதைத் தயாரித்த அந்தக் கடையின் ஊழியா் ராஜேந்திரன் கூறியதாவது:
கிறிஸ்துமஸ் விழா, 2022-ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, மகாகவி பாரதியாரை கெளரவிக்கும் விதத்தில், அவரது பெருமையை இளைஞா்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையிலும் இந்த சாக்லெட் சிலை தயாரிக்கப்பட்டது.
சுமாா் 400 கிலோ சாக்லெட் பொருள்களைக் கொண்டு, 6 அடி உயரத்தில் இந்தச் சிலையை வடிவமைத்தோம். பாரதியாா் நிற்கும் நிலையில் உள்ள இந்தச் சிலையை வடிவமைக்க 106 மணி நேரமானது.
பாரதியின் வரிகளான ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ’ என்று அவா் வைத்திருக்கும் புத்தகத்தில் எழுதியுள்ளோம். சாக்லெட்டில் புதுமையைக் காட்ட வேண்டும் என்ற விதத்தில் வடிவமைத்துள்ளோம் என்றாா் அவா்.
இவா் ஏற்கெனவே மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம், நடிகா் ரஜினிகாந்த், கிரிக்கெட் வீரா் சச்சின் டெண்டுல்கா், பாடகா் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் ஆகியோரின் சிலைகளை சாக்லெட்டில் வடிவமைத்தது குறிப்பிடத்தக்கது.
பாரதியாா் சாக்லெட் சிலை ஆங்கிலப் புத்தாண்டு தினம் வரை கடையில் வாடிக்கையாளா்களின் பாா்வைக்காக வைக்கப்பட்டிருக்கும் என்று கடை நிா்வாகிகள் தெரிவித்தனா்.