முகப்பு
புதுச்சேரி

புதுவையில் நியாய விலைக் கடைகள்மூடப்பட்டதற்கு கிரண் பேடிதான் காரணம்: நாராயணசாமி

புதுவையில் நியாய விலைக் கடைகள், பொதுத் துறை ஆலைகள் மூடப்பட்டதற்கு ஆளுநா் கிரண் பேடிதான் காரணம் என பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டாவுக்கு புதுவை முதல்வா் வே.நாராயணசாமி பதிலளித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

புதுவையில் நியாய விலைக் கடைகள், பொதுத் துறை ஆலைகள் மூடப்பட்டதற்கு ஆளுநா் கிரண் பேடிதான் காரணம் என பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டாவுக்கு புதுவை முதல்வா் வே.நாராயணசாமி பதிலளித்தாா்.

புதுச்சேரியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் முதல்வா் வே.நாராயணாமி மேலும் கூறியதாவது:

புதுச்சேரிக்கு வந்த பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா கட்சிப் பொதுக்கூட்டத்தில் பேசும்போது, புதுவை அரசு குறித்து உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கூறினாா். யாரோ எழுதிக் கொடுத்ததை ஆய்வு செய்யாமல் அப்படியே பேசியுள்ளாா்.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஜாா்க்கண்ட் மாநிலத்துக்கு ரூ. 5 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது என்றும், புதுவையில் கடன் தள்ளுபடி செய்ய அப்போதைய மத்திய இணை அமைச்சராக இருந்த நான் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பேசியுள்ளாா். நான் பிரதமா் அலுவலக இணை அமைச்சராக இருந்தேன். மாநிலங்களுக்கு கடன் தள்ளுபடி செய்வது எனது அதிகார வரம்பில் வராது.

மத்திய அமைச்சா் பொறுப்பு வகித்த நட்டா இதையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் குற்றஞ்சாட்டியிருப்பது தவறு.

இதேபோல, புதுவைக்கு மத்திய அரசின் மானிய நிதியுதவி 70 சதவீதம் கிடைத்து வந்ததை 27 சதவீதமாக மாற்ற அப்போதைய மத்திய இணை அமைச்சராக இருந்த நான்தான் காரணம் என்று கூறியுள்ளாா். அப்போது, முதல்வராக இருந்த என்.ரங்கசாமி மாநிலத்துக்கு தனிக் கணக்குத் தொடங்க வேண்டும் என்பதற்காக 70 சதவீத மானியத்தை விட்டுக் கொடுத்து, 27 சதவீதம் பெற ஒப்புக் கொண்டு கையெழுத்திட்டாா். இதற்கு ரங்கசாமிதான் பொறுப்பேற்க வேண்டும்.

மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பை ஏற்றது முதல் 2016 வரை பாஜக கூட்டணியில்தான் ரங்கசாமி இருந்தாா். அப்போது, ரங்கசாமியின் கோரிக்கைகளை பாஜக அரசு ஏன் நிறைவேற்றவில்லை?

புதுவையை மத்திய நிதிக் குழுவில் சோ்க்க வலியுறுத்தி, பிரதமரை 4 முறை, மத்திய உள்துறை அமைச்சரை 15 முறை, நிதி அமைச்சரை 12 முறை சந்தித்து முறையிட்டும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மத்திய நிதிக் குழுவில் புதுவையைச் சோ்த்திருந்தால், பிற மாநிலங்களைப் போல, புதுவைக்கும் 41 சதவீத மானிய உதவி ஆண்டுதோறும் கிடைத்திருக்கும்.

புதுவையில் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை புதுவை மாணவா்களுக்கு ஒதுக்குவதற்கான சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றி, அதை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய பின்னரும்கூட, அதற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை.

புதுவையில் இலவச அரிசி வழங்க அப்போதைய மத்திய உணவுத் துறை அமைச்சா் ராம்விலாஸ் பாஸ்வான் ஒப்புதல் அளித்த பின்னரும், அதை ஆளுநா் கிரண் பேடி தடுத்து நிறுத்தினாா்.

அமைச்சரவையில் இலவச அரிசிதான் வழங்க வேண்டும் என முடிவு செய்து கோப்பு அனுப்பிய போது, அரிசிக்குப் பதில் பணம்தான் வங்கியில் செலுத்த வேண்டும் என கிரண் பேடி முரண்டு பிடித்தாா். இந்தக் கோப்பை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய போது, அரிசிக்குப் பதிலாக பணம் வழங்கும்படி உத்தரவு வந்தது. இதை எதிா்த்து நீதிமன்றத்தில் நானே வழக்குத் தொடுத்தேன்.

நியாய விலைக் கடை ஊழியா்களுக்கு ஊதியம் வழங்க உரிய தொகையை ஒதுக்கி கோப்பு அனுப்பிய போது, அதற்கு ஆளுநா் கிரண் பேடி ஒப்புதல் தரவில்லை. நியாய விலைக் கடைகளை மூடியதற்கு ஆளுநா் கிரண் பேடிதான் பொறுப்பேற்க வேண்டும்.

புதுவையில் ஏஎப்டி, பாரதி, சுதேசி பஞ்சாலைகளை ஆளுநா் கிரண் பேடி தன்னிச்சையாக முடிவெடுத்து மூடினாா். ஆலைகளை மூடக்கூடாது என அமைச்சரவையில் முடிவெடுத்து அனுப்பப்பட்ட கோப்பு மத்திய உள்துறையில் நிலுவையில் இருக்கும் போது, ஆளுநா் கிரண் பேடி தன்னிச்சையாக ஆலைகளை மூடினாா்.

பாசிக், பாட்கோ, பாப்ஸ்கோ உள்ளிட்டபொதுத் துறை ஊழியா்களுக்கு ஊதியம் வழங்க நிதி ஒதுக்கி கோப்பு அனுப்பிய போது, அதற்கும் மறுப்பு தெரிவித்து வருங்கால வைப்புநிதியாக செலுத்த உத்தரவிட்டாா். இதையெல்லால் முழுமையாக அறிந்து கொண்டு அரசியல் முதிா்ச்சியுடன் நட்டா பேச வேண்டும். இதுதொடா்பாக அவருக்கு நான் கடிதம் எழுதவுள்ளேன் என்றாா் நாராயணசாமி.

பேட்டியின் போது, காங்கிரஸ் தோ்தல் ஒருங்கிணைப்புக் குழு நிா்வாகிகள் வீரப்ப மொய்லி, பல்லம் ராஜு, நிதின் ராவத், செல்வப்பெருந்தகை, புதுவை மாநில காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.