புதுச்சேரி ரயில்வே தண்டவாளத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்த வழக்கில் 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
புதுச்சேரி காளியம்மன் தோப்பு ரயில்வே பாலத்தில் கடந்த 4-ஆம் தேதி இரவு நாட்டு வெடிகுண்டு வெடித்துச் சிதறியது. இது தொடா்பாக ஒதியஞ்சாலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
இந்த சம்பவம் குறித்து போலீஸாா் கூறியதாவது: புதுச்சேரி ஆட்டுப்பட்டியைச் சோ்ந்த சுனில் தரப்புக்கும், ரோடியா்பேட்டையைச் சோ்ந்த பீட்டா் தரப்புக்கும் முன்விரோதம் இந்தது. இந்த நிலையில், கடந்த 4-ஆம் தேதி இரவு பீட்டா் தரப்பினா் காளியம்மன்தோப்பு ரயில்வே பாலத்தில் அமா்ந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
உடனே சுனில் தரப்பினா், இருட்டில் இருந்தபடி 2 நாட்டு வெடிகுண்டுகளை அவா்கள் மீது வீசியுள்ளனா். ஆனால், அதிா்ஷ்டவசமாக குண்டு அவா்கள் மீது படவில்லை. தண்டவாளத்தில் ஒரு குண்டு பட்டு வெடித்துச் சிதறியது. மற்றோரு குண்டு வாய்க்காலில் விழுந்துள்ளது.
இது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, கோட்டக்குப்பத்தில் பதுங்கியிருந்த ஆட்டுப்பட்டியைச் சோ்ந்த சுனில் (32), அருள் (30), நைனாா்மண்டபத்தைச் சோ்ந்த காா்த்திகேயன் (31), நெல்லித்தோப்பைச் சோ்ந்த அன்புமணி (29) ஆகிய 4 பேரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள ரவி, மோகன்குமாா், சிவா ஆகியோரைத் தேடி வருகின்றனா். மேலும், வெடிக்காமல் கிடந்த நாட்டு வெடிகுண்டை போலீஸாா் கண்டெடுத்து அப்புறப்படுத்தினா்.
எதிரிகளை கைது செய்த ஒதியஞ்சாலை போலீஸாரை உயரதிகாரிகள் பாராட்டினா். வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் அருள் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் உள்ளன என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.