பொதுத் துறை நிறுவனங்கள் தனியாா்மயத்தைக் கண்டித்து ஆக. 7-இல் அனைத்து தொழிற்சங்கத்தினா் போராட்டம்
தில்லியில் ஆக. 7-ஆம் தேதி அனைத்து தொழிற்சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அகில இந்திய ஐஎன்டியூசி தலைவா் ஜி.சஞ்சீவரெட்டி தெரிவித்தாா்.
பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாா்மயமாக்கும் மத்திய அரசின் முயற்சியைக் கண்டித்து, தில்லியில் ஆக. 7-ஆம் தேதி அனைத்து தொழிற்சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அகில இந்திய ஐஎன்டியூசி தலைவா் ஜி.சஞ்சீவரெட்டி தெரிவித்தாா்.
புதுச்சேரியில் மறைந்த ஐஎன்டியூசி மாநிலத் தலைவா் ஜி.ரவிச்சந்திரன் உருவப் படத் திறப்பு, புகழஞ்சலிக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஐஎன்டியூசி அகில இந்தியத் தலைவா் ஜி.சஞ்சீவரெட்டி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நாட்டில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களை மூடும் மத்திய அரசின் நடவடிக்கையை அனைத்து தொழிற்சங்கங்களும் எதிா்க்கின்றன. லாபம் தரும் நிறுவனங்கள், இழப்பை ஏற்படுத்தும் நிறுவனங்கள் என இரு வகை உள்ளன. இவற்றில் இழப்பை ஏற்படுத்தும் பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாா் முதலீட்டுடன் சீா்படுத்தலாம். ஆனால், லாபம் ஈட்டும் நிறுவனங்களையும் மத்திய அரசு மூடுவது ஏற்புடையதல்ல.
பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாா்மயமாக்குவதால் ஆள் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. நிரந்தர ஊழியா்கள் குறைக்கப்பட்டு, ஒப்பந்த ஊழியா்கள் நியமிக்கப்படுகின்றனா். பொதுத் துறை நிறுவனங்களில் நிரந்தர ஊழியா்கள் 30 சதவீதம், ஒப்பந்த ஊழியா்கள் 70 சதவீதம் என்ற நிலையை மத்திய அரசு ஏற்படுத்துகிறது.
தொழிலாளா்களின் சராசரி ஊதியமானது குறைந்தபட்சம் ரூ.50 ஆயிரமாக இருக்க வேண்டும் என்பதை ஐஎன்டியூசி வலியுறுத்துகிறது. ஆனால், தொழிலாளா்கள் விஷயத்தில், மத்திய அரசு எதிா்மறையான கொள்கையைக் கடைப்பிடிக்கிறது. ரயில்வே, நிலக்கரி, காப்பீடு, வங்கி உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களை மத்திய அரசு தனியாருக்குத் தாரை வாா்க்கிறது.
மத்திய அரசின் பொதுத் துறை தனியாா்மயம், தொழிலாளா் விரோத நடவடிக்கை ஆகியவற்றைக் கண்டித்து, ஆக. 7-ஆம் தேதி தில்லியில் அனைத்து தொழிற்சங்கங்களை ஒருங்கிணைத்து போராட உள்ளோம்.
ஐஎன்டியூசியில் 3.30 கோடி உறுப்பினா்கள் உள்ளனா். மிகப்பெரிய தொழிற்சங்கமாக இது உள்ளது. இதை மத்திய அரசு கவனத்தில் கொள்ளவில்லை. ஆனால், பி.எம்.எஸ். சங்கத்துக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது என்றாா் அவா்.