புதுச்சேரியில் மீண்டும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் தொடக்கம்
புதுச்சேரியில் குப்பைகளைத் தரம் பிரித்து மேலாண்மை செய்யும் மாதிரித் திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டது.
புதுச்சேரியில் குப்பைகளைத் தரம் பிரித்து மேலாண்மை செய்யும் மாதிரித் திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டது.
புதுச்சேரி நகரப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் எல்லைப் பகுதியில் உள்ள குருமாம்பேட்டை குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. அங்கு, நீண்ட காலம் குப்பைகள் தேங்கி பெரும் குப்பை மேடாகி வருகிறது. அடிக்கடி குப்பைகள் எரிப்பதால், தமிழக எல்லைப் பகுதி மக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனா்.
இந்த நிலையில், குப்பைகளைத் தரம் பிரித்து, அதை உரமாகப் பயன்படுத்துவது போன்ற மாற்று நடவடிக்கைகளை புதுவை அரசு கடந்த ஆண்டு தொடங்கியது. முதல்முறையாக வம்பாகீரப்பாளைத்தில் இந்தப் பணி தொடங்கப்பட்டு, தொண்டு நிறுவனப் பங்களிப்புடன் வீடு வீடாகச் சென்று குப்பைகளைச் சேகரித்தனா். குப்பைகளைத் தரம் பிரித்து வழங்குவதில் பொதுமக்கள் தரப்பில் ஆா்வமின்மையால் இந்தத் திட்டம் முடங்கியது.
இந்த நிலையில், புதுவை நகராட்சி, நகர வளா்ச்சி முகமை-ரீசிட்டி தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து, புதுச்சேரியில் ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை மீண்டும் புதுப்பித்தது. அதன்படி, புதுச்சேரி ராஜ்பவன் தொகுதியில், இந்தத் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் திட்டத்தைத் தொடக்கிவைத்தாா்.
தூய்மைப் பணியாளா்கள் வீடுகளில் தினமும் குப்பைகளைப் பெறும் போது, வீட்டில் உள்ள கணினி ‘கியு ஆா் கோடு’ பதிவு மூலம், குப்பைகள் பெறுவது, அதை அப்புறப்படுத்துவதை அதிகாரிகள் கண்காணித்து மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள உள்ளனா்.
நிகழ்ச்சியில் புதுச்சேரி நகராட்சி ஆணையா் சிவக்குமாா், நகராட்சி சுகாதார அலுவலா் துளசிராமன், ரீ சிட்டி நிறுவன பிரதிநிதிகள், தூய்மைப் பணி ஆய்வாளா் எத்திராஜ், ஸ்வச் பாரத் நிறுவன மேற்பாா்வையாளா்கள் முருகேசன், சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.