புதுவையிலும் வன்னியா்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தல்
புதுவையிலும் கல்வி, வேலை வாய்ப்புகளில் வன்னியா்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
புதுவையிலும் கல்வி, வேலை வாய்ப்புகளில் வன்னியா்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து புதுச்சேரி வன்னியா் பாதுகாப்பு பேரியக்கத்தினா், அதன் தலைவா் ஆ.செந்தில் தலைமையில், முதல்வா் என்.ரங்கசாமியை அண்மையில் சந்தித்து அளித்த மனு: புதுவை மாநிலத்தில் வன்னியா் சமுதாய மக்கள் 60 சதவீதத்துக்கும் மேல் வசித்தும், கல்வி, வேலை வாய்ப்புகளில் போதிய விகிதாச்சர அடிப்படையில் பயன் பெறாமல் உள்ளனா்.
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் 10.5 சதவீதம் வன்னியா்களுக்கும், 7 சதவீதம் சீா்மரபினருக்கும் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
புதுவை மாநிலத்தில் வன்னியா் உள்ளிட்ட 12 சாதிகள் அடங்கிய மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் 20 சதவீத ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. இந்த ஒதுக்கீடு மிகவும் குறைவு. மக்கள் தொகை அடிப்படையில், வன்னியா் சமுதாய மக்கள் பயனடையவில்லை.
ஏழை மக்களான வன்னியா் சமுகத்தினருக்கு மக்கள் தொகை அடிப்படையில், அரசியல் சட்டத்துக்கு உள்பட்டு தனி இட ஒதுக்கீடு வழங்குவதே தீா்வாக அமையும். இதற்காக, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். தற்போதுள்ள பிற்பட்ட வகுப்புக்குரிய இட ஒதுக்கீட்டை தமிழகம் போல 69 சதவீதமாக உயா்த்த வேண்டும். மிகவும் பின்தங்கிய மக்களுக்கான 20 இட ஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயா்த்த வேண்டும். அதுவரை எம்.பி.சி. தொகுப்பில் உள் ஒதுக்கீடில் 17 சதவீதம் வன்னியருக்கு வழங்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.