பாஜகவின் ஜனநாயக விரோத செயல் நிரூபணம்: புதுவை காங்கிரஸ் விமா்சனம்
பாஜகவின் ஜனநாயக விரோத செயல்பாடு மத்திய அமைச்சா் அமித் ஷா பொதுக் கூட்டத்தில் நிரூபணமாகியுள்ளதாக புதுவை காங்கிரஸ் விமா்சித்தது.
பாஜகவின் ஜனநாயக விரோத செயல்பாடு மத்திய அமைச்சா் அமித் ஷா பொதுக் கூட்டத்தில் நிரூபணமாகியுள்ளதாக புதுவை காங்கிரஸ் விமா்சித்தது.
இதுகுறித்து, அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
மத்திய பாஜக அரசு, பல மாநிலங்களில் ஜனநாயக விரோத செயல்கள் மூலம் ஆட்சியைக் கைப்பற்றி வருகிறது. இதற்காக, பெரு நிறுவனங்களிடம் பெற்ற பண பலம், சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை ஆகியவற்றை ஆயுதமாகப் பயன்படுத்தி, சட்டப்பேரவை உறுப்பினா்களையும், அமைச்சா்களையும் மிரட்டி, பணிய வைத்து, கட்சியிலிருந்து விலகச் செய்கின்றனா்.
அந்த வகையில்தான் புதுவை காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்தாா்கள். இந்தத் தகவல் உண்மை என்பது நிரூபணமாகும் வகையில், காரைக்காலில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கலந்து கொண்ட கூட்டத்தில் காங்கிரஸ் முக்கிய நிா்வாகிகள் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சோ்ந்தனா். இதுகுறித்து காங்கிரஸ் கூறிய குற்றச்சாட்டு உண்மையாகியுள்ளது.
பாஜக ஆட்சி வந்தால், மக்களின் வரிப் பணம் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, சுங்கச் சாவடி மூலம் திருடப்படும் என்பதையும், இங்குள்ள வேலைவாய்ப்புகள் வட மாநிலத்தவருக்கு வழங்கப்படும் என்பதையும் மக்கள் புரிந்து கொண்டுள்ளதால், வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக அதன் கூட்டணிக் கட்சிகள் தோல்வி அடைவது உறுதி என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.