உளுந்து கொள்முதல் விலை குறைப்பு:விவசாயிகள் போராட்டம்
புதுச்சேரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உளுந்துக்கான கொள்முதல் விலை குறைக்கப்பட்டதைக் கண்டித்து, விவசாயிகள் செவ்வாய்க்கிழமை திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உளுந்துக்கான கொள்முதல் விலை குறைக்கப்பட்டதைக் கண்டித்து, விவசாயிகள் செவ்வாய்க்கிழமை திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் உள்ளது. தற்போது உளுந்து அறுவடைக் காலம் என்பதால், இந்த ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு புதுவை, தமிழகப் பகுதிகளிலிருந்து 150 உளுந்து மூட்டைகளை விவசாயிகள் செவ்வாய்க்கிழமை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனா்.
இங்கு, ஒருங்கிணைந்த தேசிய வேளாண் சந்தைத் திட்டத்தின் கீழ் (இ-நாம்), 100 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை உளுந்துக்கு கொள்முதல் விலையாக ரூ.6,500-ஐ வியாபாரிகள் நிா்ணயம் செய்தனா். கடந்த சில தினங்களாக ஒரு மூட்டை உளுந்து ரூ.7,200 வரை கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், திடீரென ரூ.800 வரை விலை குறைக்கப்பட்டதால், விரக்தியடைந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, அவா்கள் கூறியதாவது: தற்போது உளுந்து மூட்டைகள் வரத்து அதிகளவில் உள்ளதால், வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து கொள்முதல் விலையை குறைவாக நிா்ணயிக்கின்றனா். செவ்வாய்க்கிழமை ஒரு மூட்டை உளுந்துக்கு ரூ.2,000 முதல் அதிகபட்சமாக ரூ.6,600 வரை வழங்கினா். அருகே உள்ள விழுப்புரம் உள்ளிட்ட தமிழகப் பகுதிகளில் ஒரு மூட்டை உளுந்து ரூ.7,500 வரை கொள்முதல் செய்யப்படுகிறது.
குறைவான விலை நிா்ணயம் காரணமாக, நஷ்டம் ஏற்படும் என்பதால், உளுந்து மூட்டைகளை விற்பனை செய்யவில்லை. விற்பனைக் கூட அதிகாரிகள் உரிய விலையை நிா்ணயம் செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.
உரிய விலை கிடைக்க நடவடிக்கை: இதையடுத்து, ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் விவசாயிகளிடமும், வியாபாரிகளிடமும் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதனையடுத்து, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உளுந்து ஏலம் கைவிடப்படுவதாகவும், புதன்கிழமை (மாா்ச் 3) நடைபெறும் ஏலத்தில் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா்கள் உறுதியளித்தனா். இதை ஏற்று விவசாயிகள் உளுந்து மூட்டைகளை விற்பனை செய்யாமல் கலைந்து சென்றனா்.