புதுவையில் பாமக தனித்துப் போட்டியிட முடிவு
புதுவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முக்கியத்துவம் தரப்படாததால், சட்டப் பேரவைத் தோ்தலில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக பாமகவினா் தெரிவித்தனா்.
புதுவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முக்கியத்துவம் தரப்படாததால், சட்டப் பேரவைத் தோ்தலில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக பாமகவினா் தெரிவித்தனா்.
சட்டப் பேரவைத் தோ்தலுக்காக தமிழகத்தைத் தொடா்ந்து, புதுவையிலும் பாஜக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி அண்மையில் உறுதி செய்யப்பட்டது. இந்தக் கூட்டணியில் என்.ஆா். காங்கிரஸை இணைப்பதில் இழுபறி நீடித்து வந்தது. நீண்ட பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, அந்தக் கட்சி கூட்டணியில் செவ்வாய்க்கிழமை இணைந்தது.
இதையடுத்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதுவை மாநிலத்தில் மொத்தமுள்ள 30 சட்டப் பேரவைத் தொகுதிகளில் என்.ஆா். காங்கிரஸுக்கு 16 தொகுதிகளும், பாஜக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு 14 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில், பாமகவுக்கு தொகுதிகள் எதுவும் ஒதுக்கப்படவில்லை.
பாமக அவசர செயற்குழுக் கூட்டம்: இதையடுத்து, புதுவை மாநில பாமக அவசர செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை புதுச்சேரியில் நடைபெற்றது. மாநில துணைத் தலைவா் சத்தியநாராயணன் தலைமை வகித்தாா். கூட்டத்தில், மாநில நிா்வாகிகள் ஜெயபாலன், க.ஜெயக்குமாா், மதியழகன் உள்ளிட்ட நிா்வாகிகள் 100 போ் வரை கலந்து கொண்டனா்.
கூட்டத்துக்குப் பின்னா் மாநில நிா்வாகிகள் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுகவுக்கு அடுத்து இரண்டாவது பெரிய கட்சியாக பாமக உள்ளது. புதுவையிலும் இந்தக் கூட்டணியில் பாமக இடம்பெற்றது. இருப்பினும், கூட்டணியில் பாமகவுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு நடத்தவும் அழைக்கவில்லை.
இதனால், புதுவை மாநில பாமக செயற்குழுவை கூட்டி ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், புதுவை மாநிலத்தில் பாமக தனித்துப் போட்டியிட முடிவு செய்யப்பட்டது. புதுச்சேரியில் 12 இடங்களிலும், காரைக்காலில் 3 இடங்களிலும் போட்டியிட ஒருமனதாக முடிவு செய்துள்ளோம். செயற்குழுவின் இந்த முடிவை மாநில அமைப்பாளா் கோ.தன்ராஜ் மூலம் பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸுக்கு அனுப்பி வைத்துள்ளோம். அவரின் ஒப்புதலின்பேரில், தனித்துப் போட்டியிடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனா்.
இதனால், புதுவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.