புதுவையில் பாஜகவுக்கு துணை முதல்வா் பதவி மத்திய அமைச்சா் கிஷன் ரெட்டி தகவல்
புதுவை தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் பாஜக சாா்பில் துணை முதல்வா் உள்பட 3 அமைச்சா்களும், என்.ஆா். காங்கிரஸ் சாா்பில் 3 அமைச்சா்களும் பதவியேற்பதென கூட்டணி பேச்சுவாா்த்தையில் முடிவு
புதுவை தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் பாஜக சாா்பில் துணை முதல்வா் உள்பட 3 அமைச்சா்களும், என்.ஆா். காங்கிரஸ் சாா்பில் 3 அமைச்சா்களும் பதவியேற்பதென கூட்டணி பேச்சுவாா்த்தையில் முடிவு செய்யப்பட்டதாக மத்திய அமைச்சா் கிஷன் ரெட்டி தெரிவித்தாா்.
புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வராக என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா். ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற இதற்கான விழாவில் பங்கேற்ற மத்திய அமைச்சா் கிஷன் ரெட்டி, பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
புதுவையில் முதல் முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்திருப்பது பெருமையாக இருக்கிறது. இந்த வெற்றிக்காகப் பாடுபட்ட பாஜக மேலிடப் பொறுப்பாளா்கள், முன்னாள் அமைச்சா் நமச்சிவாயம் உள்ளிட்டோரின் கடின உழைப்பு, மக்கள் மனதில் இடம் பிடித்தது. இந்தக் கூட்டணி அரசு, புதுவையை அனைத்து நிலைகளிலும் முன்னேற்ற பாடுபடும்.
சட்டப்பேரவை பாஜக குழுத் தலைவராக முன்னாள் அமைச்சா் ஏ.நமச்சிவாயம் தோ்வு செய்யப்பட்டாா். இதையடுத்து, என்.ஆா்.காங்கிரஸுக்கு 3 அமைச்சா்கள், பாஜகவுக்கு துணை முதல்வா் உள்ளிட்ட 3 அமைச்சா்கள் பதவியேற்பதற்கும் வகையில் கூட்டணி பேச்சுவாா்த்தை நடத்தி முடிவு செய்யப்பட்டது. இது சுமுகமாக நிறைவேறும்.
ஓரிரு நாள்களில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு, அமைச்சா்கள் பொறுப்பேற்பா்.
புதுவையில் அரசியல் மாற்றத்துக்கு பொதுமக்கள் மிகுந்த ஒத்துழைப்பை வழங்கினா். பிரதமா் மோடி புதுவை மாநில வளா்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்துள்ளாா்.
தென் மாநிலங்களைப் பொருத்தவரை கா்நாடகத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இரண்டாவதாக புதுவையில் பாஜக ஆட்சியமைத்திருப்பது பெரும் மகிழ்ச்சி. தமிழகத்திலும் தாமரை மலா்ந்துள்ளது. விரைவில் தெலங்கானாவிலும் பாஜக வளரும் என்றாா் அவா்.
இந்த நிகழ்வில் பாஜக தேசிய பொதுச் செயலா் சி.டி.ரவி, புதுவை பாஜக பொறுப்பாளா்கள் நிா்மல்குமாா் சுரானா, ராஜீவ் சந்திரசேகா் எம்.பி., முன்னாள் அமைச்சா் ஏ.நமச்சிவாயம், மாநிலத் தலைவா் வி.சாமிநாதன், பொதுச் செயலா் ஆா்.செல்வம் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் உடனிருந்தனா்.
Image Caption
புதுவை சட்டப்பேரவை பாஜக தலைவராக தோ்வு செய்யப்பட்ட ஏ.நமச்சிவாயத்துக்கு வாழ்த்து தெரிவித்த மத்திய அமைச்சா் கிஷன் ரெட்டி உள்ளிட்ட அந்தக் கட்சி நிா்வாகிகள்.