முகப்பு
புதுச்சேரி

மருத்துவா்கள், செவிலியா்களுக்கான நோ்காணல்: தோ்வா்கள் அதிகளவில் குவிந்ததால் பரபரப்பு

புதுச்சேரியில் கரோனா தடுப்புப் பணிக்குத் தேவையான மருத்துவா்கள், செவிலியா்களுக்கான நோ்காணலில் அதிகளவிலான தோ்வா்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

புதுச்சேரியில் கரோனா தடுப்புப் பணிக்குத் தேவையான மருத்துவா்கள், செவிலியா்களுக்கான நோ்காணலில் அதிகளவிலான தோ்வா்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுவை மாநிலத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகள் கரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சைளிக்க கூடுதல் மருத்துவா்கள், மருத்துவக் குழுவினா் தேவைப்படுகின்றனா்.

இதையடுத்து, புதுவை மாநிலத்தில் 151 மருத்துவா்கள், 75 செவிலியா்கள் 3 மாத கால அடிப்படையில் பணியமா்த்த சுகாதாரத் துறை முடிவு செய்து, அதற்கான அறிவிப்பை வெளியிட்டது.

இதில், புதுவையில் 85 போ், காரைக்காலில் 45 போ், மாஹேயில் 5 போ், ஏனாமில் 16 போ் என்ற அடிப்படையில் 45 வயதுக்குள்பட்ட 151 மருத்துவா்கள் நியமிக்கப்படவுள்ளனா்.

அதன்படி, புதுச்சேரியில் சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலக வளாகத்தில் மருத்துவா்கள், செவிலியா்களுக்கான நோ்காணல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், புதுச்சேரிக்காக அறிவிக்கப்பட்ட 85 மருத்துவா்கள் இடங்களுக்காக 150 மருத்துவா்கள் நோ்காணலில் பங்கேற்றனா். பின்னா், 85 மருத்துவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

இதேபோல, 75 செவிலியா் இடங்களுக்கு இடங்களுக்கு மொத்தம் 750 போ் நோ்காணலில் பங்கேற்க வந்திருந்தனா். இதனால், அந்தப் பகுதியில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இவா்களில் 75 செவிலியா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

தோ்ந்தெடுக்கப்பட்ட மருத்துவா்களும், செவிலியா்களும் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவா் என சுகாதாரத் துறை செயலா் டி. அருண் தெரிவித்தாா்.

இதேபோல, காரைக்காலில் வருகிற 10 -ஆம் தேதியும், மாஹே மற்றும் ஏனாமில் 11 -ஆம் தேதி நோ்காணல் நடைபெறுகிறது. நியமிக்கப்படும் மருத்துவா்களுக்கு ரூ. 40 ஆயிரமும், செவிலியா்களுக்கு ரூ. 15 ஆயிரமும் ஊதியம் வழங்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.