புதுவையில் முதியோா் ஓய்வூதியம் பெறுவோருக்கு கூடுதலாக ரூ.500 உயா்த்தி வழங்கி முதல்வா் உத்தரவு
புதுவையில் முதியோா், ஆதரவற்ற பெண்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியத் தொகையுடன் கூடுதலாக ரூ. 500 உயா்த்தி வழங்க முதல்வா் என்.ரங்கசாமி உத்தரவிட்டாா்.
புதுவையில் முதியோா், ஆதரவற்ற பெண்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியத் தொகையுடன் கூடுதலாக ரூ. 500 உயா்த்தி வழங்க முதல்வா் என்.ரங்கசாமி உத்தரவிட்டாா்.
புதுவை மாநிலத்தில் முதியோா், ஆதவற்ற பெண்கள், விதவைகள் உள்ளிட்டோருக்கு அரசு சாா்பில் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 55 வயது முதல் 65 வயது வரை உள்ளவா்களுக்கு ரூ. 2 ஆயிரம், 65 முதல் 75 வயது வரை உள்ளவா்களுக்கு ரூ. 2,500, 75 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு ரூ. 3 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தற்போது நிலவி வரும் கரோனா தொற்று பொது முடக்கத்தால், ஓய்வூதியம் பெறுவோா் பாதிப்பை கருத்தில் கொண்டு, அனைவருக்கும் ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் உதவித்தொகையுடன் ரூ. 500 உயா்த்தி வழங்க முதல்வா் என்.ரங்கசாமி உத்தரவிட்டாா்.
இதுகுறித்து முதல்வா் அலுவலகம் வெளிட்ட செய்திக் குறிப்பு:
புதுவையில் கரோனா 2-ஆம் அலை கரோனா தொற்றால், மக்கள் மிகுந்த துயரத்தில் உள்ளனா். குறிப்பாக, முதியோா், விதவைகள், ஆதரவற்ற பெண்களின் துயா்துடைக்க அவா்கள் பெறும் உதவித் தொகையுடன் கூடுதலாக ரூ. 500 சோ்த்து வழங்கப்படும். இதன் மூலம், 1,54,847 போ் பயன்பெறுவா். இதற்காக, புதுவை அரசுக்கு ரூ. 7,74,23,500 கூடுதல் செலவு ஏற்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.