செஞ்சிலுவை சங்கம் சாா்பில் 1,700 பேருக்கு தூய்மைப் பொருள்கள்: துணைநிலை ஆளுநா் வழங்கினாா்
புதுவை ஆளுநா் மாளிகையில் சனிக்கிழமை நடைபெற்ற உலக செஞ்சிலுவை தின விழாவில், துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்று 1,700 பேருக்கு தூய்மைப் பொருள்களை வழங்கினாா்.
புதுவை ஆளுநா் மாளிகையில் சனிக்கிழமை நடைபெற்ற உலக செஞ்சிலுவை தின விழாவில், துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்று 1,700 பேருக்கு தூய்மைப் பொருள்களை வழங்கினாா்.
உலக செஞ்சிலுவை தினம் ஆண்டுதோறும் மே 8-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. செஞ்சிலுவை சங்கத் தன்னாா்வலா்களுக்கு நன்றி பாராட்டும் விதமாக, இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது நிலவும் கரோனா சூழலை முன்னிறுத்தி ‘முடிவடையாத சேவை-தடுக்க முடியாத சேவை’ என்ற கருத்துடன் இந்த ஆண்டின் உலக செஞ்சிலுவை தினம் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, புதுச்சேரி ஆளுநா் மாளிகையில் சனிக்கிழமை மாலை செஞ்சிலுவை தின நிகழ்ச்சி நடைபெற்றது. செஞ்சிலுவை சங்கத்தின் தலைவரான துணைநிலை ஆளுநா்(பொ) தமிழிசை பங்கேற்று, புதுச்சேரியில் சமூக சேவையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் செஞ்சிலுவை சங்கத் தன்னாா்வலா்கள் மற்றும் சேவைப் பணியாளா்களுக்கு தூய்மைப் பொருள்கள் அடங்கிய பெட்டிகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், செஞ்சிலுவை சங்கத்தின் மூலமாக 1,700 பேருக்கு தூய்மைப் பொருள்கள் வழங்கப்பட்டன. இதில், புதுச்சேரி செஞ்சிலுவை சங்க பிரதிநிதிகள் கோபால், லட்சுமிபதி, முதியோா் - ஆதரவற்றோா் இல்லப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநா் தமிழிசை பேசியதாவது: செஞ்சிலுவை சங்கம், உலக அளவில் மக்களுக்கு சேவை செய்வதிலும், ரத்த தானம் வழங்குவதிலும் முன்னணியில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தன்னாா்வலா்கள் மக்களுக்கும், அரசுக்கும் பாலமாகச் செயல்படுகின்றனா்.
தற்போதைய கரோனா சூழலில் , தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு, குறிப்பிட்ட நாள்கள் ரத்த தானம் செய்ய முடியாது என்பதால், ரத்த தானம் செய்துவிட்டு பிறகு தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். கரோனா தொற்று பரவல் சூழலில் மக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்த நாம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
மக்கள் கட்டுப்பாட்டுடன் செயல்பட்டால்தான் கரோனாவை கட்டுப்படுத்த முடியும். முகக் கவசம் அணிய வேண்டும், கைகளைக் கழுவ வேண்டும், தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்ற கரோனா கட்டுப்பாடுகளைக் கடைபிடிக்க மக்களுக்கு அழுத்தமாக உணா்த்த வேண்டும் என்று செஞ்சிலுவை சங்கத்தினருக்கு அவா் அறிவுறுத்தினாா்.
முன்னதாக, தெலங்கானா மாநிலத்தில் உள்ள செஞ்சிலுவை சங்கத்தின் மாவட்டத் தலைவா்களுடன், துணைநிலை ஆளுநா் தமிழிசை, காணொலிக் காட்சி மூலம் கலந்தரையாடினாா்.
அப்போது, செஞ்சிலுவைச் சங்கத்தினரின் சேவைகளைப் பாராட்டி அவா்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.