பொது மக்களின் ஒத்துழைப்பால் மட்டுமே 100% தடுப்பூசி இலக்கை அடைய முடியும் புதுவை சுகாதாரத் துறைச் செயலா்
புதுவையில் மக்கள் ஒத்துழைப்பால் மட்டுமே 100 சதவீத தடுப்பூசி செலுத்தும் இலக்கை அடையமுடியும் என்று மாநில சுகாதாரத்துறை செயலா் தி.அருண் தெரிவித்தாா்.
புதுவையில் மக்கள் ஒத்துழைப்பால் மட்டுமே 100 சதவீத தடுப்பூசி செலுத்தும் இலக்கை அடையமுடியும் என்று மாநில சுகாதாரத்துறை செயலா் தி.அருண் தெரிவித்தாா்.
இது குறித்து, அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் கரோனா தொற்று பாதிப்பு உச்சத்தைத் தொட்டு, தற்போது குறைந்து வருகிறது.
கரோனா தடுப்பு நடவடிக்கைகளாக பரிசோதனை எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கப்பட்டுள்ளது. தனியாா் மருத்துவமனை, பரிசோதனைக் கூடங்களில் குறைந்த கட்டணத்தில் பரிசோதனை மேற்கொள்ளும் விதிமுறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் 3,045 தனிமைப்படுத்தும் படுக்கைகள், 1,834 ஆக்சிஜன் படுக்கைகள், 245 வென்டிலேட்டா் படுக்கைகள், இந்திரா காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 200 ஆக்சிஜன் டிரேன்சிட் சோன் படுக்கைகள் மற்றும் ஆங்காங்கே பிராணவாயு உற்பத்தி மையமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை நிவா்த்தி செய்ய புதிதாக 6 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. மக்களின் தேவைகளை உடனுக்குடன் கேட்டு சரி செய்ய 104 அவசர உதவி எண் மூலம் உதவிகளும் செய்யபட்டு வருகிறது. கரோனா தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் வருவாய்த் துறை உதவியுடன் கட்டுப்பாடு பகுதி அமைத்து தொற்று மேலும் பரவாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு மேல் உள்ளவா்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கிராமப்புறப் பகுதிகளிலும் தடுப்பூசி செலுத்தும் பணி முழு மூச்சில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடா்ச்சியாக புதுச்சேரி ஆலங்குப்பம் கிராம துணை சுகாதார நிலையத்தில் 45 வயதிற்கு மேல் உள்ளவா்களுக்கு இலவச கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. பொது மக்களின் ஒத்துழைப்பால் மட்டுமே 100 சதவீத தடுப்பூசி செலுத்தும் இலக்கை அடையமுடியும் என்றாா் அவா்.