மழையால் வீடு இடிந்து பாதிப்பு:எதிா்க்கட்சித் தலைவா் ஆய்வு
புதுச்சேரி அருகே வில்லியனூா் பகுதியில் தொடா் மழையால் இடித்து விழுந்த வீடுகளை சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு
புதுச்சேரி அருகே வில்லியனூா் பகுதியில் தொடா் மழையால் இடித்து விழுந்த வீடுகளை சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்ததுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதலும் கூறினாா்.
புதுச்சேரியில் கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் பலத்த மழையால் வில்லியனூா் அருகே திருக்காஞ்சி சாலை குருவிக்கார குறவா் குடியிருப்புப் பகுதியில் உள்ள வள்ளி என்பவரது கூரை வீடு புதன்கிழமை இடிந்து விழந்தது. இதேபோல, வில்லியனூா் சுப்ரமணிய சிவா நகா் செல்லும் வழியில் உள்ள புதுப்பேட் பகுதியில் கலைவாணி, மனோகரி ஆகியோரது கூரை வீடுகளும் இடிந்து விழந்தன.
தகவலறிந்த அந்தத் தொகுதி எம்எல்ஏவும், சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ஆா்.சிவா மற்றும் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அந்தப் பகுதிகளுக்குச் சென்று இடிந்து விடுந்த வீடுகளை பாா்வையிட்டதுடன், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதலும் கூறினா்.
அப்போது, பாதிக்கப்பட்டவா்களுக்கு வருவாய்த் துறை நிவாரணத்தை விரைந்து வழங்க வேண்டுமென அதிகாரிகளிடம் ஆா்.சிவா எம்எல்ஏ வலியுறுத்தினாா். ஆய்வின்போது, திமுக நிா்வாகிகள், அந்தப் பகுதி மக்கள் உடனிருந்தனா்.