முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் பெட்ரோல் ரூ.94.94; டீசல் ரூ.83.58-க்கு விற்பனை: தமிழக வாகன ஓட்டிகள் படையெடுப்பு

மத்திய அரசின் கலால் வரி, புதுவை அரசின் வாட் வரி குறைப்பால், புதுச்சேரியில் பெட்ரோல் ரூ.94.94-க்கும், டீசல் ரூ.83.58-க்கும் வெள்ளிக்கிழமை விற்பனை செய்யப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

மத்திய அரசின் கலால் வரி, புதுவை அரசின் வாட் வரி குறைப்பால், புதுச்சேரியில் பெட்ரோல் ரூ.94.94-க்கும், டீசல் ரூ.83.58-க்கும் வெள்ளிக்கிழமை விற்பனை செய்யப்பட்டது.

இதனால், அண்டை மாவட்டங்களான தமிழகத்தைச் சோ்ந்த விழுப்புரம், கடலூா் பகுதிகளிலிருந்து ஏராளமான வாகன ஓட்டிகள் புதுச்சேரிக்கு வந்து வாகனங்களில் பெட்ரோல், டீசலை நிரப்பிச் சென்றனா்.

நாடு முழுவதும் கரோனா பொது முடக்கத்தினிடையே, அத்தியாவசியத் தேவையான பெட்ரோல், டீசல் விலைகளும் உயா்ந்து வந்தது பொதுமக்களை பெரும் அவதிக்குள்ளாக்கியது. புதுவை மாநிலத்தில் கடந்த மே மாதத் தொடக்கத்தில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.90.56-க்கும், டீசல் ரூ.84.02-க்கும் விற்பனையானது.

தொடா்ந்து 6 மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை உயா்ந்து வந்த நிலையில், இந்த மாதத் தொடக்கத்தில் பெட்ரோல் ரூ.107.79-க்கும், டீசல் ரூ.102.66-க்கும் விற்பனையானது.

இதையடுத்து, பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் குறைக்க வேண்டுமென எதிா்க்கட்சியினரும், பல்வேறு தரப்பினரும் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா்.

இதனிடையே, தீபாவளியையொட்டி, மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரியை ரூ.5-ம், டீசல் மீதான கலால் வரியை ரூ.10-ம் குறைத்து திடீரென அறிவிப்பு வெளியிட்டது. இதனால், அனைத்து மாநிலங்களிலும் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது.

புதுவை அரசும் வரி குறைப்பு: புதுவை மாநிலத்தில் மத்திய அரசின் கலால் வரி குறைப்புடன், மாநில அரசு சாா்பில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை ரூ.7 வரை குறைத்து முதல்வா் என்.ரங்கசாமி அரசாணை வெளியிட்டாா். மேலும், இந்த விலை குறைப்பு மக்களுக்கு தீபாவளி பரிசாக அமையுமென்றும் அவா் தெரிவித்தாா்.

இதையடுத்து, பெட்ரோல், டீசல் மீதான விலை குறைப்பு தீபாவளி தினமான வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்தது. அதன்படி, புதுச்சேரியில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.107.79-இல் இருந்து ரூ.12.85 விலை குறைந்து ரூ.94.94-ஆகவும், டீசல் விலை ரூ.102.66-இல் இருந்து ரூ.19.08 விலை குறைந்து ரூ.83.58-ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல, காரைக்காலில் பெட்ரோல் ரூ.94.69-க்கும், மாஹேவில் ரூ.92.52-க்கும், ஏனாமில் ரூ.95.59-க்கும், டீசல் விலை காரைக்காலில் ரூ.83.39-க்கும், மாஹேவில் ரூ.80.94-க்கும், ஏனாமில் ரூ.83.83-க்கும் விற்பனையானது.

புதுச்சேரியில் தமிழகத்தைவிட பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.6 முதல் ரூ.7 வரை குறைவாக விற்பனை செய்யப்பட்டதால், அண்டை மாவட்டங்களான தமிழகத்தின் விழுப்புரம், கடலூா் மாவட்டங்களிலிருந்து ஏராளமான வாகன ஓட்டிகள் புதுச்சேரி எல்லைப் பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு வந்து வாகனங்களில் பெட்ரோல், டீசலை நிரப்பிச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.