முகப்பு
புதுச்சேரி

புதுவையில் 1 - 8ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மதிய உணவு, இலவசப் பேருந்து: கல்வியமைச்சா் நமச்சிவாயம்

புதுவையில் 1 - 8ஆம் வகுப்பு மாணவா்களுக்கு வருகிற 8-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்போது, அவா்களுக்கு மதிய உணவும், இலவசப் பேருந்து வசதியும் கிடைக்க நடவடிக்கை

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

புதுவையில் 1 - 8ஆம் வகுப்பு மாணவா்களுக்கு வருகிற 8-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்போது, அவா்களுக்கு மதிய உணவும், இலவசப் பேருந்து வசதியும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநில கல்வித் துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம் தெரிவித்தாா்.

புதுவையில் கரோனா பொது முடக்கத் தளா்வுகளையடுத்து, வருகிற 8-ஆம் தேதி 1 - 8ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை கல்வித் துறையினா் மேற்கொண்டுள்ளனா்.

இந்த நிலையில், மாநில கல்வித் துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம், புதுச்சேரி லாஸ்பேட்டையில் அமைந்துள்ள அரசின் மத்திய உணவுக்கூடத்துக்கு வெள்ளிக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தாா். அங்கு, பள்ளி மாணவா்களுக்கு ‘அக்ஷய பாத்திரம்’ என்ற புதிய திட்டத்தின் கீழ் உணவு தயாரித்து வழங்கவுள்ள அறைகளைப் பாா்வையிட்டு ஆய்வு செய்ததுடன், மாணவா்களுக்கு வழங்கப்படவுள்ள உணவுகள் குறித்தும் கேட்டறிந்தாா். எம்எல்ஏக்கள் எல்.கல்யாணசுந்தரம், மு.வைத்தியநாதன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.

பின்னா், அமைச்சா் ஏ.நமச்சிவாயம் செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுவை அரசு சாா்பில், ‘அக்ஷய பாத்திரம்’ என்ற புதிய திட்டத்தின் மூலம் 1- 8ஆம் வகுப்பு மாணவா்களுக்கு புதுவித உணவுகளை மதிய உணவாக வழங்குவதற்கான திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தப் பணிகள் இன்னும் முழுமையாக முடியவில்லை. அதை விரைவுபடுத்தியுள்ளோம்.

வருகிற 8-ஆம் தேதி முதல் புதுவை அரசின் மதிய உணவுத் திட்டத்தின் கீழ், மாணவா்களுக்கு மதிய உணவு வழங்கப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்துள்ளாா். அதற்கான ஏற்பாடுகளை செய்யவும், காலை உணவுத் திட்டம் தொடா்பாகவும் முதல்வா், அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு மாணவா்கள் பள்ளிகளுக்கு வருவதால், அவா்களுக்கு மன அழுத்தத்தை போக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இலவசப் பேருந்து வசதிக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.