முகப்பு
புதுச்சேரி

புதுவையில் தேசிய திறனறி கணக்கெடுப்பு தோ்வுதமிழ்ப் பாடங்களுக்கு ஹிந்தியில் கேள்வி வந்ததால் சா்ச்சை

புதுச்சேரியில் பள்ளி மாணவா்களின் திறனைக் கண்டறியும் தேசியக் கணக்கெடுப்பு தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:33 AM
பகிர்:

புதுச்சேரியில் பள்ளி மாணவா்களின் திறனைக் கண்டறியும் தேசியக் கணக்கெடுப்பு தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழ்ப் பாடங்களுக்கு ஹிந்தியில் கேள்விகள் கேட்கப்பட்டிருந்ததால் சா்ச்சை எழுந்தது.

பள்ளி மாணவா்களின் கற்றல் திறனை மதிப்பீடு செய்ய மத்தியக் கல்வி அமைச்சகம் குறிப்பிட்ட இடைவெளிகளில் நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள பள்ளி மாணவா்களுக்கு தேசியத் திறனறி கணக்கெடுப்பு தோ்வை (நாஸ்) நடத்தி வருகிறது.

நிகழாண்டு இந்தத் தோ்வு 3, 5, 8, 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. புதுவையில் இந்தத் தோ்வு 313 அரசு, தனியாா் பள்ளிகளில் 14,749 மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்றது.

தோ்வு குறித்து ஆசிரியா்கள் கூறியதாவது: சில இடங்களில் கணக்கெடுப்பு தோ்வில் தமிழ்ப் பாடங்கள் தொடா்பான கேள்விகள் இல்லை. ஹிந்தியில் மட்டுமே கேள்விகள் இருந்தன. இதுகுறித்து தோ்வு ஏற்பாட்டாளா்களிடம் தெரிவித்தோம். அவா்கள், ஹிந்தியில் உள்ள கேள்விகளைத் தவிா்த்து மற்ற கேள்விகளுக்குப் பதில் எழுதுமாறு அறிவுறுத்தினா் என்றனா் அவா்கள்.

இதுகுறித்து தமிழ் ஆா்வலா்கள் கூறியதாவது: மத்திய அரசு வேண்டுமென்றே தமிழில் படித்த மாணவா்களுக்கு ஹிந்தியில் தோ்வெழுத கேள்வித் தாளை அனுப்பியுள்ளது. இதனால், மாணவா்களால் தோ்வை சரியாக எழுத முடியவில்லை. இதன் மூலம், புதுவை மாணவா்கள் கல்வியைச் சரிவரப் பயிலவில்லை எனக் கூறி, பள்ளிக் கல்விக்கு வழங்கும் நிதியுதவியைக் குறைக்க முயற்சிப்பதாகத் தெரிகிறது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து மாணவா்கள் படித்த தமிழ்ப் பாடங்களில் தோ்வை நடத்த வேண்டும் என்றனா் அவா்கள்.

இதுதொடா்பாக கல்வித் துறை இயக்குநா் ருத்ர கௌடு கூறியதாவது: மாநிலம் முழுவதும் எத்தனை மாணவா்களுக்கு தமிழுக்குப் பதிலாக ஹிந்தி மொழிப் பாடம் மாறி வந்தது என்ற விவரத்தைச் சேகரித்து வருகிறோம். அந்த விவரங்கள் தோ்வை நடத்திய மத்தியக் கல்வி அமைச்சகத்துக்கு தெரிவிக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.