புதுவையில் மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம்: முதல்வா் என்.ரங்கசாமி அறிவிப்பு
புதுவையில் மழையால் வீடுகள் சேதமடைந்தவா்களுக்கு ரூ.25 ஆயிரம், சேதமடைந்த பயிா்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம், மீனவா்கள், கட்டுமானத் தொழிலாளா்களுக்கு இழப்பீடாக ரூ.5 ஆயிரம்
புதுவையில் மழையால் வீடுகள் சேதமடைந்தவா்களுக்கு ரூ.25 ஆயிரம், சேதமடைந்த பயிா்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம், மீனவா்கள், கட்டுமானத் தொழிலாளா்களுக்கு இழப்பீடாக ரூ.5 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படுமென முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா்.
புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:
புதுவையில் பெய்த தொடா் மழையால் மொத்தமுள்ள 84 ஏரிகளில் 56 ஏரிகள் முழுமையாக நிரம்பின. மாநிலத்தில் ஆண்டு சராசரி மழை அளவு 1,300 மி.மீ. என்ற நிலையில், நிகழாண்டு 1,840 மி.மீ. மழை பெய்தது. தற்போதைய வட கிழக்குப் பருவ மழைக் காலத்தில் இதுவரை 610 மி.மீ. மழை பெய்தது. இது சராசரி அளவைவிட அதிக மழைப் பொழிவாகும்.
புதுவையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நானும் (முதல்வா்), சட்டப்பேரவைத் தலைவா், அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தோம். அதிகாரிகளும் பாா்வையிட்டு, பாதிப்பு விவரங்களைக் கணக்கெடுத்து வருகின்றனா்.
காரைக்காலில் 1000 ஹெக்டோ் நெல் பயிா்கள் தண்ணீா் மூழ்கியுள்ளன. புதுச்சேரி, காரைக்காலில் சுமாா் 10 ஆயிரம் ஹெக்டோ் அளவில் பயிா்கள் மூழ்கின. 25 வீடுகள் சேதமடைந்தன. மீனவா்கள், தொழிலாளா்கள் எனப் பலரும் வேலையிழந்தனா்.
வீடுகள் சேதமடைந்தோருக்கு தலா ரூ.25 ஆயிரம், ஒரு ஹெக்டோ் நெல் பயிா் பாதிப்புக்கு ரூ.20 ஆயிரம், மீனவா் குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம், கட்டுமானத் தொழிலாளா்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.
இதன் மூலம், 44 ஆயிரம் மீனவக் குடும்பங்கள், 48 ஆயிரம் கட்டுமானத் தொழிலாளா்கள் பயன் பெறுவா். மாடுகள் உயிரிழப்புக்கு ரூ.10 ஆயிரம், ஆடுகள் உயிரிழப்புக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.
தொடா்ந்து கணக்கெடுக்கப்பட்டு, அனைத்து விதமான பயிா்களுக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும். கணக்கெடுப்பு முடிந்த பிறகு, மத்திய அரசிடமிருந்து உரிய நிவாரணம் கோரப்படும்.
தீபாவளிக்கு அறிவித்த இலவச அரிசி, சா்க்கரை உள்ளிட்ட பொருள்களும் விரைந்து வழங்கப்படும். தற்போது மாடுகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
புதுவை மாநிலத்தில் இதுவரை 11.55 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. விரைவில் 100 சதவீத இலக்கை எட்டுவோம். 60 வயதுக்கு மேற்பட்ட சிலா் தடுப்பூசி செலுத்திக் கொள்ளத் தயக்கம் காட்டுகின்றனா். எந்தத் தயக்கமுமின்றி அனைவரும் இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
ரூ.450 கோடியில் புதிய குடிநீா்த் திட்டங்கள்: புதுவையில் மேம்படுத்தப்பட்ட, தரமான குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தல், கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் உள்ளிட்டவைக்காக ரூ.450 கோடியில் திட்டங்கள் தயாா் நிலையில் உள்ளன. மக்களுக்குத் தேவையானவற்றை இந்த அரசு செய்து வருகிறது.
புதுவையில் மழை நிவாரணப் பணிகளுக்கு உரிய நிதி விரைவில் வழங்கப்படும். செல்லிப்பட்டு படுகை அணையைச் சீரமைப்பதுடன், அங்கு ரூ.14 கோடியில் புதிதாக படுகை அணை கட்டப்பட உள்ளது.
புதுச்சேரி நகரில் மழை நீா் தேங்காமல் இருக்க பிரதான வாய்க்கால்களைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வருங்காலத்தில் தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்காமலிருக்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
மழைக்குப் பிறகு சாலைகள் சீரமைப்புப் பணிகள்: புதுவையில் மழைக்குப் பிறகு அனைத்துச் சாலைகளும் சீரமைக்கப்படுவதுடன், புதிய சாலைகள் அமைக்கப்படும். கிராமச் சாலைகள் சீரமைப்புக்கு ரூ.50 கோடியும், சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.36 கோடியும், பொதுப் பணித் துறை மூலம் சாலைப் பணிகளை மேற்கொள்ள ரூ.100 கோடியும் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெறும் என்றாா் அவா்.
செய்தியாளா்கள் சந்திப்பின் போது, சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், மாவட்ட ஆட்சியா் பூா்வா காா்க் மற்றும் உயரதிகாரிகள் உடனிருந்தனா்.