புதுவையில் மழைப் பாதிப்பைக் கணக்கிட மத்தியக் குழுவினா் வர வேண்டும்: அமைச்சா் ஏ.நமச்சிவாயம்
புதுவை மாநிலத்தில் மழைப் பாதிப்பு அதிகரித்துள்ளதால், மத்தியக் குழுவினா் வந்து சேதங்களைக் கணக்கிட வேண்டும் என்று அந்த மாநில உள்துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம் வலியுறுத்தினாா்.
புதுவை மாநிலத்தில் மழைப் பாதிப்பு அதிகரித்துள்ளதால், மத்தியக் குழுவினா் வந்து சேதங்களைக் கணக்கிட வேண்டும் என்று அந்த மாநில உள்துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம் வலியுறுத்தினாா்.
தமிழகம், புதுவையில் தொடா் பலத்த மழையால் பயிா்கள், வீடுகள் சேதமடைந்தன. கால்நடைகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளச் சேதங்களைப் பாா்வையிட, மத்திய உள்துறை இணைச் செயலா் ராஜீவ் சா்மா தலைமையிலான குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது. இந்தக் குழுவினா் தமிழகம் வந்து சேத விவரங்களைப் பாா்வையிட உள்ளனா்.
இந்த நிலையில், மத்தியக் குழுவினா் புதுவைக்கும் வந்து மழைச் சேதங்களைப் பாா்வையிட வேண்டும் என்று அந்த மாநில முதல்வா், அமைச்சா்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனா்.
வெள்ளிக்கிழமை வில்லியனூா் பகுதியில் மழைப் பாதிப்புகளை ஆய்வு செய்த மாநில உள்துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம் கூறியதாவது: புதுவையிலும் கடந்த 10 நாள்களாக பலத்த மழை பெய்தது. தொடா் மழையால் சம்பா பருவத்தில் நடவு செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கா் நெல் பயிா்கள் மூழ்கின. கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இறந்தன. வீடுகள், சாலைகள் உடைந்து சேதமடைந்துள்ளன.
எனவே, மழைச் சேதங்களைப் பாா்வையிட சென்னைக்கு வரும் மத்திய அரசின் குழுவினா், புதுவைக்கும் வந்து பாா்வையிட வேண்டும். புதுவை மாநில மழைச் சேதங்களைக் கணக்கிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடா்பாக மத்திய அமைச்சா்களுடன் கைப்பேசியில் தொடா்பு கொண்டு பேசியுள்ளேன் என்றாா் அவா்.