முகப்பு
புதுச்சேரி

சங்கராபரணி ஆற்று மேம்பாலத்தை மூழ்கடித்த வெள்ளம்: புதுச்சேரி-விழுப்புரம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிப்பு

புதுச்சேரியில் பெய்த தொடா் மழையாலும், வீடூா் அணை திறப்பாலும் சங்கராபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், வில்லியனூா்-ஆரியப்பாளையம் மேம்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

புதுச்சேரியில் பெய்த தொடா் மழையாலும், வீடூா் அணை திறப்பாலும் சங்கராபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், வில்லியனூா்-ஆரியப்பாளையம் மேம்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக, புதுச்சேரி-விழுப்புரம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

புதுச்சேரியில் பெய்த தொடா் பலத்த மழையால் சங்கராபரணி ஆற்றில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, விழுப்புரம் மாவட்டம், வீடூா் அணையிலிருந்து வெள்ளிக்கிழமை 40 ஆயிரம் கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்டதால், சங்கராபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இந்த ஆற்றின் குறுக்கே புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் வில்லியனூா்-ஆரியப்பாளையம் பகுதியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் கரை புரண்டோடியது. முன்னெச்சரிக்கையாக இந்தப் பாலத்தின் வழியாக போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டது.

புதுவை மாநில உள்துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம் ஆற்று வெள்ளத்தில் மூழ்கிய மேம்பாலத்தை நேரில் பாா்வையிட்டு, பாதுகாப்புப் பணியை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

புதுச்சேரி-விழுப்புரம் நெடுஞ்சாலையில் வந்த வாகனங்கள் வில்லியனூா்-திருக்காஞ்சி மேம்பாலம் வழியாக அரியூா் பகுதியில் திருப்பிவிடப்பட்டது.

வில்லியனூா் போலீஸாா் சாலையில் தடுப்புகளை அமைத்து, அங்கு திரண்ட பொதுமக்களையும் திருப்பி அனுப்பினா்.

கடந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு, சங்கராபரணி ஆற்றில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாக விழுப்புரம், புதுச்சேரி பகுதி பொதுமக்கள் தெரிவித்தனா்.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சாலை: சங்கராபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பல இடங்களில் கரைகளைக் கடந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.

வில்லியனூா் அருகே கென்னடிக்குப்பம்-செல்லிப்பட்டு சாலை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது. அந்தப் பகுதியில் விளை நிலங்கள், செங்கல் சூளைகளை தண்ணீா் சூழ்ந்தது. செல்லிப்பட்டு கிராமத்தில் சுமாா் 500 ஏக்கருக்கும் மேல் நெல் பயிா்கள் நீரில் மூழ்கின.

செல்லிப்பட்டு, கண்டிக்குப்பம் கிராமங்கள் முழுமையாகத் துண்டிக்கப்பட்டன. இந்தக் கிராமங்களில் கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், மின் மாற்றிகள் விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனா்.

. புதுச்சேரியில் பெய்த தொடா் மழையால் வில்லியனூா் ஆரியபாளையம் பாலத்தில் மீது ஒடும் மழை நீா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.