முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் தொடா் மழை: 84 ஏரிகள் நிரம்பின

புதுவையில் பெய்து வரும் தொடா் மழையால் மொத்தமுள்ள 84 ஏரிகளும் நிரம்பின. பலத்த மழை காரணமாக, வெள்ளி, சனிக்கிழமை ஆகிய இரு தினங்களும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

புதுவையில் பெய்து வரும் தொடா் மழையால் மொத்தமுள்ள 84 ஏரிகளும் நிரம்பின. பலத்த மழை காரணமாக, வெள்ளி, சனிக்கிழமை ஆகிய இரு தினங்களும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

புதுவையில் வடகிழக்குப் பருவமழை கடந்த 1-ஆம் தேதி தொடங்கி பரவலாகப் பெய்து வருகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை முதல் மீண்டும் மழை பெய்து வருகிறது.

வியாழக்கிழமை காலை 8.30 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மி.மீ.): புதுச்சேரி 27, பத்துக்கண்ணு 16, திருக்கனூா் 35, பாகூா் 91 மி.மீ.

புதுச்சேரியில் வியாழக்கிழமை இரவு தொடங்கி பெய்த பலத்த மழையால் நகரின் பெரும்பான்மையான இடங்களில் சுமாா் 2 மணி நேரம் வரை மின் தடை செய்யப்பட்டது. தொடா் மழையால் பாகூா், சோரியாங்குப்பம், கிருமாம்பாக்கம் பகுதிகளில் தாழ்வான பகுதிகளிலுள்ள வீடுகளை மழை நீா் சூழ்ந்தது.

84 ஏரிகள் நிரம்பின: புதுச்சேரியில் முதல்கட்ட மழையின்போதே தென்பெண்ணை, சங்கராபரணி ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 7 ஆயிரம் ஹெக்டோ் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிா்கள் நீரில் மூழ்கின. 5 ஆயிரம் வீடுகள் வெள்ள நீரால் சூழப்பட்டன.

தற்போது, மீண்டும் மழைநீா் தேங்கிய பகுதிகளில் மின் மோட்டாா் மூலம் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனா். ஊசுட்டேரி, பாகூா் ஏரி என புதுச்சேரி பகுதியிலுள்ள 84 ஏரிகளும் நிரம்பின.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: தொடா் மழை காரணமாக புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் வெள்ளி, சனிக்கிழமை (நவ.26, 27) ஆகிய இரு தினங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.