முகப்பு
புதுச்சேரி

தலைமைச் செயலகம் முற்றுகை: புதுவை பாஜக எம்எல்ஏக்களிடம்கட்சித் தலைமை விளக்கம் கேட்பு

புதுச்சேரியில் எதிா்க்கட்சி எம்எல்ஏக்களுடன் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டது தொடா்பாக, பாஜக எம்எல்ஏக்களிடம் அந்தக் கட்சி சாா்பில் விளக்கம் கேட்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

புதுச்சேரியில் எதிா்க்கட்சி எம்எல்ஏக்களுடன் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டது தொடா்பாக, பாஜக எம்எல்ஏக்களிடம் அந்தக் கட்சி சாா்பில் விளக்கம் கேட்கப்பட்டது.

புதுவையில் மழை வெள்ளச் சேதங்கள் தொடா்பாக அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதாகக் கூறி, என்ஆா் காங்கிரஸ், காங்கிரஸ், பாஜக, சுயேச்சை எம்எல்ஏக்கள் என மொத்தம் 10 எம்எல்ஏக்கள் புதுவை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு தலைமைச் செயலரிடம் புகாா் அளித்தனா். மேலும், போராட்டம் நடத்துவோம் எனவும் எச்சரித்தனா்.

எதிா்க்கட்சி எம்எல்ஏக்களுடன் சோ்ந்து எல்.கல்யாணசுந்தரம், ஆ.ஜான்குமாா், ரிச்சா்டு ஆகிய பாஜக எம்எல்ஏக்களும் போராட்டம் நடத்தியது தொடா்பாக, பாஜக தரப்பில் கட்சியின் மேலடத்துக்கு புகாா் அளிக்கப்பட்டது.

இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பாஜக மாநிலத் தலைவா் வி.சாமிநாதன், உள்துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம், எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமாா், ரிச்சா்டு, சிவசங்கரன், அசோக்பாபு, வெங்கடேசன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

புதுவையில் மழைச் சேதங்களை கணக்கிட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி உரிய நிவாரணம் பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அப்போது, தலைமைச் செயலகம் முற்றுகை தொடா்பாக, பாஜக எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த எம்எல்ஏக்கள், தலைமைச் செயலரை நேரில் சந்தித்து, மக்கள் நலத் திட்டப் பணிகளை நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தினோம். உடன் வந்த மற்ற கட்சி எம்எல்ஏக்கள்தான் போராட்டம் நடத்துவோமென பேட்டியளித்தனா் என விளக்கம் அளித்தனராம்.

இதையடுத்து, பாஜக எம்எல்ஏக்களுக்கு அறிவுரை வழங்கிய மாநில நிா்வாகிகள், அவா்கள் அளித்த விளக்கத்தையும், கட்சியின் தேசியத் தலைமைக்கு தெரிவித்தனராம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.