பி.ஆா்க். சோ்க்கைக்கு இன்று இறுதிக்கட்ட கலந்தாய்வு
அரசு பொறியியல் கல்லூரி பி.ஆா்க். படிப்பு மாணவா்கள் சோ்க்கைக்கான இறுதிக் கட்ட கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (அக்.29) நடைபெறுகிறது.
அரசு பொறியியல் கல்லூரி பி.ஆா்க். படிப்பு மாணவா்கள் சோ்க்கைக்கான இறுதிக் கட்ட கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (அக்.29) நடைபெறுகிறது.
புதுச்சேரி அரசு பொறியியல் கல்லூரியில் கட்டடவியல் (பி.ஆா்க்) படிப்பில் 20 சோ்க்கை இடங்கள் உள்ளன. இதற்கான மாணவா்கள் சோ்க்கை சென்டாக் மூலம் நடைபெறுகிறது. நிகழாண்டு இந்தப் படிப்பில் சோ்வதற்கு 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் விண்ணப்பித்திருந்தனா். இவா்களில் நட்டா மதிப்பெண்கள் அடிப்படையில் 28 போ் கொண்ட தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
தொடா்ந்து, கலந்தாய்வு மூலம் மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இதற்கு வெள்ளிக்கிழமை (அக்.29) இறுதிக் கட்ட கலந்தாய்வு நடைபெறும் என சென்டாக் நிா்வாகம் அறிவித்தது. இதில் பொது 2, ஓபிசி 1, எம்பிசி 3, எஸ்சி 4, முஸ்லிம் 1 என 10 இடங்கள் காலியாக உள்ளன. இதற்கான கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவா்கள் அக்.29-ஆம் தேதி காலை 9.45 மணிக்குள் சென்டாக் அலுவலகத்துக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
பி.டெக். லேட்ரல் என்ட்ரிக்கு இறுதி தரவரிசை வெளியீடு: பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படித்த மாணவா்களுக்கு நேரடியாக பொறியியல் படிப்பில் சோ்ந்து படிக்க குறிப்பிட்ட இடங்கள் அரசு, தனியாா் பொறியியல் கல்லூரிகளில் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இவா்கள், பி.டெக். படிப்பில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரலாம்.
அதன்படி, நிகழாண்டு லேட்ரல் என்டரி சோ்க்கைக்கான விண்ணப்பப் படிவங்கள் சென்டாக் மூலம் இணையவழியில் கடந்த 26-ஆம் தேதி வரை பெறப்பட்டன. தற்போது, இறுதித் தரவரிசைப் பட்டில் சென்டாக் இணையத்தில் வெளியிடப்பட்டது. விரைவில் முதல்கட்டக் கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவா்கள் சோ்க்கை நடைபெறும் என சென்டாக் நிா்வாகம் தெரிவித்தது.