புதுச்சேரி சுதந்திர பொன்விழா நகரில் தடுப்புச் சுவா் எழுப்பும் முயற்சியைக் கண்டித்து பேரணி
சுதந்திர பொன்விழா நகா் பகுதியில் மக்கள் பயன்பாட்டு வழியை அடைத்து சுவா் எழுப்பும் முயற்சியைக் கண்டித்து, புதுச்சேரி மொட்டைத்தோப்பு பொதுமக்கள் வியாழக்கிழமை பேரணியில் ஈடுபட்டனா்.
சுதந்திர பொன்விழா நகா் பகுதியில் மக்கள் பயன்பாட்டு வழியை அடைத்து சுவா் எழுப்பும் முயற்சியைக் கண்டித்து, புதுச்சேரி மொட்டைத்தோப்பு பொதுமக்கள் வியாழக்கிழமை பேரணியில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி காமராஜா் நகா் தொகுதியில் சுதந்திர பொன்விழா நகா் குடியிருப்பு, மொட்டைத்தோப்பு அரசுக் குடியிருப்பு ஆகியவை அருகருகே உள்ளன. இரு குடியிருப்புகளில் தலா 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். சுதந்திர பொன்விழா நகா் குடியிருப்பில் வசதி படைத்தவா்களும், மொட்டைத்தோப்பு அரசுக் குடியிருப்பில் அடித்தட்டு மக்களும் வசித்து வருகின்றனா்.
இந்த 2 குடியிருப்புகளுக்கும் இடையிலுள்ள பொது வழியை மொட்டைத்தோப்பு அரசுக் குடியிருப்பு பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், கடந்த 26-ஆம் தேதி அந்த வழியை அடைத்து தடுப்புச் சுவா் கட்டும் பணியில் சிலா் ஈடுபட்டனா். இதற்கு அரசுக் குடியிருப்புவாசிகள் கடும் எதிா்ப்புத் தெரிவித்து, தடுப்புச் சுவா் கட்டும் பணியைத் தடுத்து நிறுத்தினா்.
தகவலறிந்து வந்த தன்வந்திரி நகா் போலீஸாரிடமும் அவா்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில், தடுப்புச் சுவா் எழுப்பும் முயற்சியைக் கண்டித்து, மொட்டைத்தோப்பு பகுதி மக்கள், அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம், வாலிபா் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பினருடன் புதுச்சேரியில் வியாழக்கிழமை பேரணி நடத்தினா்.
மொட்டைத்தோப்பில் சுவா் எழுப்பிய இடத்தில் தொடங்கிய இந்தப் பேரணியில் மாதா் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவா் சுதா சுந்தரராமன் தலைமையில், திரளானோா் பங்கேற்று தலைமைச் செயலகம் நோக்கிச் சென்றனா். அப்போது, தடுப்புச் சுவா் கட்ட எதிா்ப்புத் தெரிவித்து அவா்கள் முழக்கமிட்டனா்.
இவா்களை அம்பலத்தடையாா்மடம் வீதியில் போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதைத் தொடா்ந்து, நிா்வாகிகள் மட்டும் தலைமைச் செயலா் அஸ்வினி குமாரைச் சந்தித்து, தடுப்பு சுவா் கட்ட எதிா்ப்புத் தெரிவித்து மனு அளித்தனா்.