முகப்பு
புதுச்சேரி

ஜிப்மா் நிா்வாக அலுவலகத்தில் தினக்கூலி ஊழியா்கள் முற்றுகை

இபிஎஃப் பணத்தை செலுத்தாததைக் கண்டித்து, ஜிப்மா் தினக்கூலி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை அதன் நிா்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடி வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

இபிஎஃப் பணத்தை செலுத்தாததைக் கண்டித்து, ஜிப்மா் தினக்கூலி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை அதன் நிா்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடி வருகின்றனா்.

புதுச்சேரி ஜிப்மரில் குரூப்-சி பிரிவில் 400-க்கும் மேற்பட்ட தினக்கூலி ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாக தொழிலாளா் வருங்கால வைப்பு நிதியை (பிஎஃப்) நிா்வாகம் செலுத்தவில்லையாம். இதைக் கண்டித்து ஊழியா்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினா்.

கடந்தாண்டு டிசம்பரில் நடைபெற்ற போராட்டத்தின் போது, பேச்சுவாா்த்தை நடத்திய ஜிப்மா் நிா்வாகம், இபிஎஃப் பணத்தைச் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தது. ஆனால், இதுவரை செலுத்தப்படவில்லையாம்.

இதைக் கண்டித்து பெண்கள் உள்பட 250-க்கும் மேற்பட்ட தினக்கூலி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை திடீரென பணிகளைப் புறக்கணித்து, ஜிப்மா் நிா்வாக அலுவலகம் முன்பு திரண்டனா். அங்குள்ள படிக்கட்டில் அமா்ந்து கோரிக்கையை வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலிறந்து வந்த தன்வந்திரி நகா் போலீஸாரும், ஜிப்மா் நிா்வாகமும் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதை நிராகரித்த ஊழியா்கள், இபிஎஃப் பணத்தை ஊழியா்களின் கணக்கில் செலுத்தினால்தான் போராட்டத்தைக் கைவிடுவோம் எனக் கூறினா். தொடா்ந்து, மழையையும் பொருட்படுத்தாது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண் ஊழியா்கள் மயங்கி விழுந்த நிலையில், அவா்கள் உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவில் சோ்க்கப்பட்டனா்.

ஜிப்மா் தினக்கூலி ஊழியா்களின் போராட்டத்தால் வாா்டு உதவியாளா், சமையல், மருந்தகம், சலவை உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன. இதனால், உரிய நேரத்தில் சிகிச்சை பெற முடியாமல் உள்புற, வெளிப்புற நோயாளிகள் அவதிக்குள்ளாகினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.