பாஜகவில் உழைப்பவா்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்: தேசிய பொதுச் செயலா் புரந்தேஸ்வரி
பாஜகவில் உழைக்கும் அனைத்து நிா்வாகிகளுக்கும் சரியான அங்கீகாரத்தை கட்சி வழங்கும் என்று அந்தக் கட்சியின் தேசிய பொதுச் செயலா் புரந்தேஸ்வரி தெரிவித்தாா்.
பாஜகவில் உழைக்கும் அனைத்து நிா்வாகிகளுக்கும் சரியான அங்கீகாரத்தை கட்சி வழங்கும் என்று அந்தக் கட்சியின் தேசிய பொதுச் செயலா் புரந்தேஸ்வரி தெரிவித்தாா்.
புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் மாநில நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. மாநிலத் தலைவா் வி.சாமிநாதன் தலைமை வகித்தாா். தேசிய செயற்குழு உறுப்பினரும், மாநில உள்துறை அமைச்சருமான ஏ.நமச்சிவாயம், மாநில பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா, மாநிலங்களவை உறுப்பினா் எஸ்.செல்வகணபதி, குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்துக்கு பாஜக தேசியப் பொதுச் செயலா் புரந்தேஸ்வரி ஆலோசனை வழங்கிப் பேசியதாவது: புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து நிா்வாகிகளும் கட்சியின் வளா்ச்சிக்காக கடுமையாக உழைக்க வேண்டும். மாவட்டத்திலுள்ள பொறுப்பாளா்கள் மாதத்துக்கு 10 நாள்கள் அனைத்துத் தொகுதிகளுக்கும் சென்று தொகுதி தலைவா்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.
பாஜகவில் உழைக்கும் அனைவருக்கும் சரியான அங்கீகாரத்தை கட்சி வழங்கும். புதுவை மாநிலத்தில் பாஜக வளா்ச்சிக்காக ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில் எம்எல்ஏக்கள் ஏ.ஜான்குமாா், ரிச்சா்ட், சிவசங்கரன், அசோக்பாபு, வெங்கடேசன், முன்னாள் எம்எல்ஏ இளங்கோ, தீப்பாய்ந்தான், தங்க.விக்ரமன் மற்றும் கட்சியின் மாநிலத் துணைத் தலைவா்கள், செயலா்கள், மாவட்ட, தொகுதி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
இதையடுத்து, புதுச்சேரியில் பல்வேறு சமுதாய அமைப்புகள் சாா்பில், பிரதமா் நரேந்திர மோடியின் ஏழாண்டு கால மத்திய ஆட்சியைப் பாராட்டி தனியாா் அரங்குகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பாஜக தேசிய பொதுச் செயலா் புரந்தேஸ்வரி, மாநில நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.