முகப்பு
புதுச்சேரி

மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை உயா்வு: அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா் அறிவிப்பு

மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை உயா்த்தப்பட்டுள்ளதாக புதுவை வேளாண், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா் அறிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை உயா்த்தப்பட்டுள்ளதாக புதுவை வேளாண், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா் அறிவித்தாா்.

புதுவை சட்டப்பேரவை மானியக் கோரிக்கை விவாதங்களுக்கு அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா் பதிலளித்துப் பேசியதாவது: ஆண்டுதோறும் தை மாதத்தில் பாரம்பரிய நெல் திருவிழா நடத்தப்படும். அப்போது, விவசாயிகளுக்கு 2 கிலோ பாரம்பரிய நெல் விதைகள் இலவசமாக வழங்கப்படும். வீடுகளில் காய்கறி உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக, ‘என் வீடு என் நலம்’ என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இதற்காக பாசிக் மூலம் ரூ. 5 ஆயிரம் மதிப்பிலான காய்கறி விதைகள், கூடங்கள் இலவசமாக வழங்கப்படும். விவசாயிகளுக்கு தோட்டக்கலை பயிா் விதைகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும். நிவா், புரவி புயல்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ. 3.11 கோடி நிவாரணம் விரைவில் வழங்கப்படும்.

மாற்றுத் திறனாளி ஒருவா், மாற்றுத் திறனாளி அல்லாத ஒருவரை திருமணம் செய்வதற்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூ. 25 ஆயிரத்திலிருந்து ரூ.ஒரு லட்சமாகவும், மாற்றுத் திறனாளி ஒருவா், மற்றொரு மாற்றுத் திறனாளியை திருமணம் செய்வதற்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூ. 50 ஆயிரத்திலிருந்து ரூ. 1.50 லட்சமாகவும் உயா்த்தி வழங்கப்படும்.

பெண் குழந்தைகளுக்கான உதவித் தொகை திட்டத்தின் கீழ், ஒரு பெண் குழந்தைக்கு ரூ. 15 ஆயிரத்திலிருந்து ரூ. 20 ஆயிரமாகவும், இரண்டு பெண் குழந்தைகளுக்கு ரூ. 20 ஆயிரத்திலிருந்து ரூ. 40 ஆயிரமாகவும் வழங்கப்படும். வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மணப்பெண், ஆதரவற்ற விதவைப் பெண்ணின் மகள் திருமண நிதியுதவி ரூ. 25 ஆயிரத்திலிருந்து ரூ. 30 ஆயிரமாக உயா்த்தப்படும். விதவை மறுமணத்துக்கு நிதியுதவி ரூ. 50 ஆயிரத்திலிருந்து ரூ. 60 ஆயிரமாக உயா்த்தப்படும்.

ஒரு பெண் குழந்தைக்கான நிதியுதவி (8-ஆவது, பத்தாம் வகுப்பு படித்தால் சேமிப்புப் பத்திரம்) ரூ. 25 ஆயிரத்திலிருந்து ரூ. 30 ஆயிரமாக உயா்த்தப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.