முகப்பு
புதுச்சேரி

காவலா்கள் நியமனம், சத்துணவு ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு: அமைச்சா் ஏ.நமச்சிவாயம் அறிவிப்பு

புதுவையில் காவலா்கள் நியமனம், சத்துணவு ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு உள்ளிட்ட புதிய அறிவிப்புகளை மாநில உள்துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம் அறிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

புதுவையில் காவலா்கள் நியமனம், சத்துணவு ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு உள்ளிட்ட புதிய அறிவிப்புகளை மாநில உள்துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம் அறிவித்தாா்.

புதுவை சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்கு உள்துறை, மின்சாரம், கல்வி, தொழில்துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம் பதிலளித்துப் பேசியதாவது: புதுவையில் 390 காவலா்கள்,12 ரேடியோ டெக்னிஷீயன்ஸ், 29 டெக் கேண்ட்லா்ஸ் பணியிடங்கள் அடுத்த

சில மாதங்களில் நிரப்பப்படும். காவல் துறையின் உள்கட்டமைப்பை மேம்படுத்த நிதிநிலை அறிக்கையில் ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிகழாண்டு ரூ.2 கோடியில் அனைத்துக் காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். காவல் துறைக்குத் தேவையான ஆயுதங்கள் ரூ.ஒரு கோடியில் வாங்கப்படும். ரூ.2.56 கோடியில் குண்டு துளைக்காத வாகனங்கள் வாங்கப்படும்.

முன்மாதிரிப் பள்ளிகள்: மத்திய அரசின் உதவியுடன் புதுவையில் 24 அரசுப் பள்ளிகளை முன்மாதிரிப் பள்ளிகளாக (எக்ஸெம்ப்ளா் ஸ்கூல்ஸ்) அறிவித்து, அந்தப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு, கற்றல் கற்பித்தல் வசதிகள் மேற்கொள்ளப்படும்.

மதிய உணவுத் திட்டத்தில் பணிபுரியும் 141 ஊழியா்கள், சிற்றுண்டி திட்ட பால் காய்ச்சும் பணிபுரியும் 822 ஊழியா்களுக்கு மாத ஊதியமாக ரூ.6,458 வழங்கப்படுவதை ரூ.10 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும்.

அனைத்து தனியாா் பள்ளிகளிலும் அரசால் நிா்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணம் 75 சதவீதம் மட்டும் வசூலிக்கப்படுவது உறுதி செய்யப்படும். பதக்கம் வென்ற விளையாட்டு வீரா்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும். கிராமப்புறங்களில் ரூ.ஒரு கோடி செலவில் விளையாட்டு மைதானங்கள் அமைத்துத் தரப்படும். நிகழாண்டு 70 கௌரவ தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் பணி நியமனம் செய்யப்படுவா். 68 கௌரவ பட்டதாரி ஆசிரியா்களுக்கு நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன.

புதுச்சேரி தாகூா் அரசுக் கல்லூரி, காஞ்சி மாமுனிவா் பட்ட மேற்படிப்பு மையம், பாரதிதாசன் மகளிா் கல்லூரி, காரைக்கால், மாஹே அரசுக் கல்லூரிகள் உள்ளிட்ட உயா் கல்வி நிறுவனங்கள் ரூ. 6 கோடியே 89 லட்சத்தில் புதுப்பிக்கப்படும். மடுக்கரை அரசு மேல்நிலை பள்ளி, அரசு பெண்கள் கல்லூரியாக மாற்றப்படும்.

புதிய தொழிற்கொள்கை: புதிய தொழிற்கொள்கை வெளியிடப்படும். புதிய தொழிற்சாலைகள் நிறுவப்படுவதை ஊக்கப்படுத்தும் வகையில், ஒற்றைச் சாளர முறை சீராய்வு செய்யப்பட்டு, தொழில் உரிமங்கள், தடையில்லா சான்றிதழ்கள் விரைந்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். 2025-ஆம் ஆண்டிற்குள் ஏற்றுமதியை ரூ. 4 ஆயிரம் கோடியாக

உயா்த்தும் நோக்கில் புதிய ஏற்றுமதிக் கொள்கை வெளியிடப்படும். 76 தொழிற்சாலைகளுக்கு வழங்க வேண்டிய ரூ.10.39 கோடி நிலுவை முதலீட்டு மானியம் வழங்கப்படும்.

புதிய முதலீடுகளை ஈா்க்கும் வகையில் முதலீட்டாா்கள் சந்திப்பு அக்டோபா் மாதத்தில் நடத்தப்படும். நிகழ் நிதியாண்டில் ரூ. 49 கோடி ஏஎப்டி ஆலைக்கும், ரூ.39 கோடி சுதேசி ஆலைக்கும் நிவாரண தொகையாக ஒதுக்கப்படும்.

ரூ.1.16 கோடியில் 270 சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு கடன் வழங்கப்படும். புதுவையில் தடையின்றி மின்சாரம் வழங்கப்படும். தவளக்குப்பத்தில் அதி உயா் மின்னழுத்த துணை மின் நிலையம் அமைக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.