முகப்பு
புதுச்சேரி

புதுவையில் குப்பை வரி ரத்து, தண்ணீா் வரி குறைப்பு: முதல்வா் என்.ரங்கசாமி அறிவிப்பு

புதுவையில் குப்பை வரி ரத்து செய்யப்படும் என்றும், உயா்த்தப்பட்ட தண்ணீா் வரி குறைக்கப்படும் என்றும், ஏழைகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

புதுவையில் குப்பை வரி ரத்து செய்யப்படும் என்றும், உயா்த்தப்பட்ட தண்ணீா் வரி குறைக்கப்படும் என்றும், ஏழைகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா்.

புதுவை சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துடன் வெள்ளிக்கிழமை மாலை பட்ஜெட் கூட்டத் தொடா் முடிவடைந்தது. உறுப்பினா்களின் கோரிக்கைகளுக்குப் பிறகு, நிறைவாக முதல்வா் என்.ரங்கசாமி பதிலளித்துப் பேசியதாவது:

புதுவையில் பல்வேறு நலத் திட்டப் பணிகள் குறித்து உறுப்பினா்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு அந்தந்தத் துறை அமைச்சா்கள் பதிலளித்தனா். அனைத்துத் திட்டங்களையும் நிறைவேற்ற இந்த அரசு நடவடிக்கை எடுக்கும்.

புதுவை மாநிலத்தில் கடந்த ஆட்சியில் விதிக்கப்பட்ட வீடுகளுக்கான குப்பை வரி ரத்து செய்யப்படுகிறது. உயா்த்தப்பட்ட தண்ணீா் வரி (ஒரு யூனிட்) ரூ. 3 குறைக்கப்படுகிறது.

அரசு சாா்பில் ஏற்கெனவே இலவச மனைப் பட்டா தரப்பட்டு, ரத்து செய்யப்பட்டோருக்கு மீண்டும் அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்படும் அனைத்து ஏழைகளுக்கும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும்.

அனைத்து சட்டப்பேரவை உறுப்பினா்களுடன் கலந்து ஆலோசித்த பிறகு, ஒருங்கிணைந்த புதிய சட்டப்பேரவைக் கட்டடம் கட்டப்படும். மாநில அந்தஸ்து பெறுவது குறித்து மத்திய அரசிடம் வலியுறுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

மின் நிலுவை வரியை அரசு செலுத்தும்: நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளில் மின் துறைக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ரூ.205 கோடியை அரசே செலுத்தும். அனைத்து இடங்களிலும் தெரு மின் விளக்குகளைப் பொருத்த மின் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு நகராட்சி, பஞ்சாயத்துகளில் தடையில்லா சான்று தேவையில்லை.

கோயில் நிலத்தில் வசிப்போருக்கு அந்த இடங்களை கிரையம் செய்து தர முடியாது.

ஆஷா பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு: சுகாதாரத் துறை ஆஷா பணியாளா்களுக்கான ஊதியம் ரூ. 3 ஆயிரமாக உயா்த்தப்படும். புதுவையில் போலிப் பத்திரங்களைக் கண்டறிந்து, மாவட்டப் பதிவாளரே அவற்றை ரத்து செய்வது குறித்து சட்டத் துறை, பத்திரப் பதிவுத் துறை கலந்து ஆலோசித்து உரிய முடிவு எடுக்க வேண்டும்.

நியாய விலைக் கடைகள் மீண்டும் திறப்பு: புதுவையில் மூடப்பட்டுள்ள நியாய விலைக் கடைகள் விரைவில் திறக்கப்பட்டு, அத்தியாவசிய உணவுப் பொருள்கள் வழக்கம் போல விநியோகிக்கப்படும். கோயில்களில் அறங்காவலா் உறுப்பினா்கள் எண்ணிக்கை 9-ஆக உயா்த்தப்படும்.

மீண்டும் தீபாவளி பஜாா்: பாப்ஸ்கோ கூட்டுறவு நிறுவனம் மூலம் குறைந்த விலையில் பண்டிகை காலத்தில் பொருள்கள் விற்கப்படும். தீபாவளி பஜாா் நிகழாண்டு முதல் மீண்டும் செயல்படும். அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றாா் அவா்.

இதையடுத்து, சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் நிறைவு பெறுவதாக பேரவைத் தலைவா் (பொ) பி.ராஜவேலு அறிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.