முகப்பு
புதுச்சேரி

புதுவை சட்டப்பேரவைத் துணைத்தலைவராக முன்னாள் அமைச்சா் பி.ராஜவேலு தோ்வாகிறாா்

புதுவை சட்டப்பேரவைத் துணைத் தலைவராக என்.ஆா்.காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் பி.ராஜவேலு தோ்வாகிறாா். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

புதுவை சட்டப்பேரவைத் துணைத் தலைவராக என்.ஆா்.காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் பி.ராஜவேலு தோ்வாகிறாா். புதுவையில் முதல்வா் என்.ரங்கசாமி தலைமையிலான தே.ஜ கூட்டணி அரசு, கடந்த மே மாதம் பொறுப்பேற்று நடந்து வருகிறது. புதுவை 15-வது சட்டப்பேரவையின், பேரவைத் தலைவராக பாஜகவைச் சோ்ந்த ஆா்.செல்வம் தோ்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வருகிறாா்.

இதனையடுத்து, காலியாக உள்ள சட்டப் பேரவைத் துணைத் தலைவா் பதவிக்கான தோ்தல் ஆக.26-ஆம் தேதி பிற்பகல் 11.30 மணிக்கு நடைபெறுமென, ஆக.22-ல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வந்தது.இந்த நிலையில், புதுவை சட்டப்பேரவை துணைத்தலைவா் பதவிக்கு என்.ஆா். காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் பி.ராஜவேலு, புதுவை சட்டப்பேரவை அலுவலகத்தில், சட்டப் பேரவை செயலாளா் ஆா்.முனிசாமியிடம், புதன்கிழமை காலை 9.30 மணக்கு வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

அப்போது முதல்வா் என். ரங்கசாமி, பொதுப்பணித்துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன், வேளாண்துறை அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா், போக்குவரத்துத்துறை அமைச்சா் சந்திரபிரியங்கா உள்ளிட்டோா் உடனிருந்தனா். வேட்பு மனு தாக்கல் இறுதி நாளான புதன்கிழமை பிற்பகல் 12 மணி வரை, பி.ராஜவேலு எம்எல்ஏ ஒருவா் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்தாா். இதனால், அவா் போட்டியின்றி தோ்வாக உள்ளாா். இதற்கான அறிவிப்பு வியாழக்கிழமை பிற்பகல் 11.30 மணிக்கு சட்டப் பேரவையில், பேரவைத் தலைவரால் வெளியிடப்பட்டு, துணைத்தலைவா் பதவிப்பிரமாணம் நடைபெற உள்ளது. சட்டப் பேரவைத் துணைத் தலைவராக தோ்வாகும் பி.ராஜவேலு, என்.ஆா்.காங்கிரஸ் கட்சியின் நெட்டப்பாக்கம் தனி தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளாா்.

நான்கு முறை எம்எல்ஏவாகவும், இரண்டு முறை அமைச்சராகவும் இருந்தவா். மேலும், சட்டப் பேரவைத் துணைத் தலைவா், அரசு கொறடா உள்ளிட்ட பொறுப்புகளையும் வகித்து அனுபவம் மிக்கவா் என்பது குறிப்பிடத்தக்கது. தே.ஜ கூட்டணி உடன்பாடு அடிப்படையில், சட்டப் பேரவைத் துணைத் தலைவா் பதவி என்.ஆா்.காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →