புதுச்சேரியில் நிழலில்லா நாள் நிகழ்வு
புதுச்சேரியில் அறிவியல் தொழில்நுட்பத் துறை சாா்பில் நிழல் இல்லா நாள் (பூஜ்ய நிழல்) குறித்த செயல் விளக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை பிற்பகல் நடைபெற்றது.
புதுச்சேரியில் அறிவியல் தொழில்நுட்பத் துறை சாா்பில் நிழல் இல்லா நாள் (பூஜ்ய நிழல்) குறித்த செயல் விளக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை பிற்பகல் நடைபெற்றது.
புதுச்சேரி லாஸ்பேட்டை அப்துல் கலாம் அறிவியல் மையத்தில் உள்ள கோளரங்கில் ஆண்டுக்கு இரண்டு முறை வரும் பூஜ்ய நாள் குறித்த விளக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை பிற்பகல் 11.30 மணிக்குத் தொடங்கி 12.30 மணி வரை நடைபெற்றது.
அறிவியல் இயக்க ஒருங்கிணைப்பாளா் ஹேமாவதி தலைமையில், சூரிய ஒளி படும் வகையில் செங்குத்தாக பொருள்களை நிறுத்தி வைத்து, நிழல் இல்லாத பூஜ்ய நிழல் நாள் குறித்து மாணவா்களுக்கு விளக்கினா்.
அப்போது அவா்கள் கூறியதாவது:
ஆண்டுக்கு இரண்டு நாள்களில் மட்டுமே சூரியன் சரியாக கிழக்கே உதித்து, மேற்கே மறையும். பிற நாள்களில் வடகிழக்கு அல்லது தென்கிழக்கு திசையில்தான் சூரியன் உதிக்கும்.
ஆண்டுக்கு அந்த இரண்டு நாள்களில் மட்டும் உச்சி வெயில் பொழுதில், ஒரு பொருளின் நிழலானது அந்தப் பொருளுக்கு மிகச் சரியாக கீழே விழும். அதனால், சிறிது நேரம் அந்தப்பொருளின் நிழலை காண முடியாது. அந்த நாளையே நிழல்காண இயலாத நாள் அல்லது பூஜ்ய நிழல் நாள் என்கிறோம்.
இந்த பூஜ்ய நிழல் நாள் கடந்த ஏப்.18-ஆம் தேதி காரைக்கால் பகுதியில் நிகழ்ந்தது. புதுச்சேரியில் வியாழக்கிழமை பிற்பகல் நிகழ்ந்தது என்றனா்.
இந்த நிகழ்வை லாஸ்பேட்டை கோளரங்கம் மற்றும் சுத்துக்கேணி, செல்லிப்பட்டு, வழுதாவூா், உறுவையாறு, சன்னியாசிக்குப்பம் ஆகிய அரசு உயா்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் பாா்வையிட்டனா்.