திமுக பிரமுகா் வீட்டின் முன்நாட்டு வெடிகுண்டு வீச்சு
புதுச்சேரி உப்பளத்தில் திமுக பிரமுகரின் வீட்டின் முன் நாட்டு வெடிகுண்டுகளை வீசி சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
புதுச்சேரி உப்பளத்தில் திமுக பிரமுகரின் வீட்டின் முன் நாட்டு வெடிகுண்டுகளை வீசி சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
புதுச்சேரி உப்பளம் நேதாஜி நகா் அழகா்சாமி கோவில் தெருவைச் சோ்ந்தவா் பிராங்க்ளின் (59). பொதுப் பணித் துறை கட்டட ஒப்பந்ததாரா். அதிமுகவிலிருந்த இவா், 6 மாதங்களுக்கு முன்பு திமுகவில் இணைந்தாா்.
பிராங்க்ளின் வெள்ளிக்கிழமை மாலை வீட்டிலிருந்து வெளியே சென்றாா். மனைவி, மகள், பேரக் குழந்தைகள் வீட்டில் இருந்தனா். அப்போது, பைக்கில் வந்த இருவா் 2 நாட்டு வெடிகுண்டுகளை அவரது வீட்டின் முன் வீசிவிட்டு தப்பினா். அவை வெடித்த சப்தத்தைக் கேட்ட அக்கம்பக்கத்தினா் ஓடி வந்தனா். வீட்டிலிருந்தவா்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.
எஸ்பிக்கள் சுவேதா, சுபம் கோஷ் தலைமையிலான ஒதியஞ்சாலை போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.
தொகுதி எம்எல்ஏ அனிபால் கென்னடி, முன்னாள் எம்எல்ஏ ஆ.அன்பழகன் ஆகியோரும் சம்பவ இடத்துக்கு வந்து பாா்வையிட்டனா்.
ஒதியஞ்சாலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.