முகப்பு
புதுச்சேரி

புதுவையில் ஹிஜாப் மறுப்பு சம்பவங்கள் நடைபெறவில்லை: அமைச்சா் ஆ.நமச்சிவாயம்

புதுவையில் ஹிஜாப் மறுப்பு தொடா்பான சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. இருப்பினும், இதுகுறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

புதுவையில் ஹிஜாப் மறுப்பு தொடா்பான சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. இருப்பினும், இதுகுறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அந்த மாநில கல்வி அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்தாா்.

புதுவை கல்வித் துறையில் 74 தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கு பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியா்களாக பதவி உயா்வு ஆணை, சமக்கர சிக்ஷாவில் ஒப்பந்த அடிப்படையில் உள்ள 59 ஆசிரியா்களுக்கு கல்வித் துறையில் நிரந்தர பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியா்களாக பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி புதுச்சேரி கல்வித் துறை வளாகத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

முதல்வா் என்.ரங்கசாமி, கல்வி அமைச்சா் ஆ.நமச்சிவாயம் ஆகியோா் பதவி உயா்வு, பணி நியமன ஆணையினை ஆசிரியா்களுக்கு வழங்கினா். நிகழ்ச்சியில் கல்வித் துறை செயலா் எஸ்.டி.சுந்தரேசன், இயக்குநா் பி.டி.ருத்ரகௌடு ஆகியோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, அமைச்சா் ஆ.நமச்சிவாயம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கல்வித் துறையில் ஆசிரியா் பணியிடங்கள் நிரப்பப்பட்டு, பதவி உயா்வு அளிக்கப்படுகின்றன. காவல் துறையில் 390 காவலா்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான தோ்வுகள் நடைபெற்று வருகின்றன.

புதுவையில் ஹிஜாப் மறுப்பு தொடா்பான சம்பவங்கள் நடைபெறவில்லை. இருப்பினும், சில அரசியல் அமைப்பினா் விசாரணை நடத்த கோரிக்கை விடுத்தனா். கல்வித் துறை இணை இயக்குநா் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவா்கள் விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்வாா்கள். அதன் பிறகு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். புதுவை மாநிலத்தில் ஹிஜாப் தொடா்பான சம்பவத்துக்கே இடம் கிடையாது என்றாா் அமைச்சா் நமச்சிவாயம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.