புதுவையின் மேம்பாட்டுத் திட்டங்கள்: வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தல்
பிரதமா் அறிவித்த கதி சக்தி திட்டத்தில், புதுவையின் மேம்பாட்டுத் திட்டங்களை ஒன்றிணைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுச்சேரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் வெ.வைத்திலிங்கம் வலியுறுத்தினாா்.
பிரதமா் அறிவித்த கதி சக்தி திட்டத்தில், புதுவையின் மேம்பாட்டுத் திட்டங்களை ஒன்றிணைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுச்சேரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் வெ.வைத்திலிங்கம் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
நமது பிரதமா் கொண்டுவந்துள்ள கதி சக்தி திட்டத்தில், புதுவையில் வளா்ச்சியை ஏற்படுத்த கூடிய திட்டங்களை அரசு ஒன்றிணைக்க வேண்டும். கதி சக்தி திட்டத்தில் முதன்மையாக விளங்கக் கூடிய நீா், நில, வான்வழி போக்குவரத்து, சாலைகள், சிறப்பு பொருளாதார மண்டலம், மென்பொருள் உற்பத்தி நிலையம் அமைத்தல் ஆகிய திட்டங்களை புதுவைக்கு கொண்டு வருவதற்கான முழு ஏற்பாட்டையும் மாநில அரசு செய்ய வேண்டும்.
குறிப்பாக, போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காண ராஜீவ் காந்தி சதுக்கத்திலிருந்து இந்திரா காந்தி சதுக்கம் வரையில் மேம்பாலம் அமைக்கக் கூடிய திட்டத்தை உடனடியாக மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். அதில், புதுச்சேரி துறைமுகத்தை மேம்பாலத்தில் இணைக்கும் அமைப்பையும் உருவாக்க வேண்டும்.
புதுச்சேரியில் விமான சேவையை மீண்டும் தொடங்க ஏற்பாடு செய்ய வேண்டும். மாநிலத்தின் கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு நிகழாண்டு ரூ.ஒரு லட்சம் கோடி அளவுக்கு மாநில அரசுகளுக்கு வட்டியில்லா கடன் தருவதாக கூறியுள்ளது.
இந்தத் திட்டத்தை புதுவை அரசு பயன்படுத்தி, மத்திய அரசிடமிருந்து நிதியைப் பெற்று, புதுவைக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
மாநில அரசும், துணைநிலை ஆளுநரும் திட்டங்களுக்கான கோப்புகளை மத்திய அரசுக்கு அனுப்பி, அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுவை மாநிலத்தின் உரிமையை பெற்றுத் தர வேண்டும் என்றாா் வைத்திலிங்கம்.