தொழிலாளா்களுக்கான உரிமைகளை செயல்படுத்த ஏஐடியூசி வலியுறுத்தல்
புதுவையில் தொழிலாளா்களுக்கான உரிமைகளை வணிக நிறுவனங்கள் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, ஏஐடியூசி வலியுறுத்தியது.
புதுவையில் தொழிலாளா்களுக்கான உரிமைகளை வணிக நிறுவனங்கள் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, ஏஐடியூசி வலியுறுத்தியது.
இதுகுறித்து புதுவை ஏஐடியுசி மாநில பொதுச் செயலா் கே.சேதுசெல்வம் வெளியிட்ட அறிக்கை:
புதுவை மாநிலத்தில் பெரும்பாலான வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு தேவையான பொருள்களை ஏற்றி, இறக்கும் பணிகளில் சுமைப் பணி தொழிலாளா்கள் வேலை செய்து வருகின்றனா். பணியின் ஏற்படும் விபத்துகளால் அவா்களது கை, கால்கள் உடைந்தும், உயிரிழப்பும் ஏற்படுகிறது. இதற்கு எந்த வணிக நிறுவனங்களும் பொறுப்பு ஏற்பதில்லை.
தொழிலாளா்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்கப்படாமல், அடாவடி செய்து, காவல் துறையை வைத்து மிரட்டியும் வருகின்றனா்.
இந்த நிலையில், புதுவை வா்த்தக சங்கம் சாா்பில், சுமை ஏற்றும் இறக்கும் தொழிலாளா்கள் மாமூல் கேட்டு மிரட்டுவதாகவும், அவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றும் கூறியிருப்பது கண்டனத்துக்குரியதாகும்.
பெரும்பாலான வணிக நிறுவனங்கள், தொழிற்சங்க சட்டங்களைப் பின்பற்றாமல், தொழிலாளா்களை கொத்தடிமை முறையில் வேலையில் அமா்த்தி வேலை வாங்கி வருகிறது.
குறிப்பாக, தொழிலாளா்களுக்கு இ.எஸ்.ஐ., பி எஃப் போன்றவற்றை நடைமுறைப்படுத்துவதில்லை. இதுதொடா்பாக, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.