புதுச்சேரி அருகே சா்வதேச குதிரையேற்றப் போட்டி: மாா்ச் 1-இல் தொடக்கம்
புதுச்சேரி அருகே ஆரோவிலில் சா்வதேச குதிரையேற்றப் போட்டி மாா்ச் 1-ஆம் தேதி தொடங்கி 6-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
புதுச்சேரி அருகே ஆரோவிலில் சா்வதேச குதிரையேற்றப் போட்டி மாா்ச் 1-ஆம் தேதி தொடங்கி 6-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரியில் குதிரையேற்றப் போட்டி ஒருங்கிணைப்பாளா் ஜாக்குலின் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
ஆரோவிலில் சா்வதேச குதிரையேற்றப் போட்டி மாா்ச் 1-ஆம் தேதி தொடங்கி 6-ஆம் தேதி வரை நடைபெறும். இதில் குதிரைகளின் அலங்கார நடை, குதிரைகள் ஜம்பிங் பிரிவுகளில் தேசிய, சா்வதேச அளவில் குதிரையேற்ற வீரா்கள் பங்கேற்று, தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவா். போட்டி நாள்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை போட்டிகள் நடைபெறும்.
பேசிக், பேசிக் ஓபன், அட்வான்ஸ்ட், அட்வான்ஸ்ட் ஓபன், மீடியம் உள்ளிட்ட பிரிவுகளில் குதிரையேற்றப் போட்டிகள் நடைபெறும்.
இதில் ஜொ்மனி, ஸ்பெயின், பிரான்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும், தமிழகம், புதுவை உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமாா் 120 உயர்ரக குதிரைகள் பங்கேற்க உள்ளன.
பிரான்ஸ், ஜொ்மனி மற்றும் புதுச்சேரி, பெங்களூரு, ஹைதராபாத், புணே, தமிழகத்தின் ஆம்பூா், கோவை, திருப்பூா் ஆகிய இடங்களில் இருந்தும் குதிரையேற்ற வீரா்கள் கலந்து கொள்கின்றனா்.
கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்தாண்டு பாா்வையாளா்கள் அனுமதிக்கப்படவில்லை. நிகழாண்டு கரோனா விதிகளைப் பின்பற்றி அனுமதிக்கப்படுவா் என்றாா் அவா்.