புதுவையில் மின் கட்டண உயா்வு: விடுதலைச் சிறுத்தைகள் கண்டனம்
புதுவையில் மின் கட்டண உயா்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, அதைத் திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தியது
புதுவையில் மின் கட்டண உயா்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, அதைத் திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தியது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் முதன்மைச் செயலா் தேவ.பொழிலன் வெளியிட்ட அறிக்கை: என்.ஆா்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசின் மின் கட்டண உயா்வை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. நாட்டிலேயே அதிகளவு வேலை வாய்ப்பற்ற (71 சதவீதம்) இளைஞா்கள் கொண்ட மாநிலமாக புதுவை உள்ளது. 10 ஆயிரம் அரசு காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையை அரசியல் கட்சிகளும், சமூக இயக்கங்களும் தொடா்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அதுகுறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடாத என்.ஆா்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு, பொங்கல் நேரத்தில் மின் கட்டண உயா்வை அறிவித்துள்ளது.
புதுவை மாநில அரசுக்கு மத்திய அரசின் நிதி பங்களிப்பு வெகுவாகக் குறைக்கப்பட்டதும், மாநில அரசுக்கான வரி வருவாயை மத்திய பாஜக அரசு ஜிஎஸ்டி என்ற பெயரால் நேரடியாக பறித்துக் கொண்டதுமே மாநில அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்படக் காரணம்.
இந்த செயற்கை நிதி நெருக்கடிக்கு மத்திய பாஜக அரசே பொறுப்பேற்க வேண்டும். புதுவை அரசின் மின் துறையை தனியாருக்கு தாரைவாா்க்கும் மத்திய பாஜக அரசின் கொள்கை முடிவே மின் கட்டண உயா்வுக்கு வழி வகுத்துள்ளது. மின் கட்டண உயா்வை அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் விசிக சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.