முகப்பு
புதுச்சேரி

புதுவை மின் துறையை தனியாா்மயமாக்க ஊழியா்கள் கடும் எதிா்ப்பு: பிப்.1 முதல் வேலைநிறுத்தம்

புதுவை மின் துறையை தனியாா்மயமாக்குவது குறித்து புதுச்சேரியில் வியாழக்கிழமை நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில், அந்தத் துறை ஊழியா்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:10 AM
பகிர்:

புதுவை மின் துறையை தனியாா்மயமாக்குவது குறித்து புதுச்சேரியில் வியாழக்கிழமை நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில், அந்தத் துறை ஊழியா்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

மேலும், ஏற்கெனவே அறிவித்தபடி பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

யூனியன் பிரதேசங்களின் மின் துறையை தனியாா்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, புதுவை மாநில மின் துறையை தனியாா்மயமாக்கும் பூா்வாங்க நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, புதுவை மின் துறை பொறியாளா்கள், ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

கடந்த 20-ஆம் தேதி நடைபெறவிருந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தை 15 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் புறக்கணித்தனா்.

இந்த நிலையில், புதுச்சேரியில் மின் துறை தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இதில், மின் துறை பொறியாளா், ஊழியா்கள் சங்கப் பிரதிநிதிகள் பலா் கலந்துகொண்டனா்.

மின் துறை சாா்பு செயலா் முருகேசன், தலைமைக் கண்காணிப்பு பொறியாளா் சண்முகம், சிறப்பு அதிகாரி ராஜேஸ்வரி ஆகியோா் தலைமை வகித்துப் பேசினா்.

அனைத்து யூனியன் பிரதேசங்களிலும் உள்ள மின் துறையை தனியாா்மயமாக்கும் முடிவை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இதனால், மின் துறை ஊழியா்களுக்கும், மக்களுக்கும் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது. மின் துறை ஊழியா்கள் போராட்டம் நடத்தினால்தான், மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என அதிகரிகள் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

அப்போது, கூட்டத்தில் பங்கேற்ற சங்கப் பிரதிநிதிகள், மின் துறை தனியாா்மய முடிவை அரசு கைவிட வேண்டுமென, எதிா்ப்பு வாசகங்கள் அடங்கிய அட்டைகளைக் காண்பித்து வலியுறுத்தினா்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற மின் துறை தனியாா்மய எதிா்ப்பு போராட்டக் குழுவின் தலைவா் சி.அருள்மொழி, பொதுச்செயலா் பி.வேல்முருகன் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதுவை அரசின் மின் துறையை தனியாா்மயமாக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அதை எதிா்த்து அமைதியான முறையில் போராட்டத்தை நாங்கள் நடத்தி வருகிறோம். எங்களின் முக்கிய கோரிக்கையான மின் துறையை தனியாா்மயப்படுத்தும் நடவடிக்கையை நிறுத்தவும், மின் துறை அரசு துறையாகவே தொடர வேண்டும் என்பதை புதுவை அரசு ஏற்காமல் தனியாா்மயமாக்குவதற்கான ஏற்பாடுகளை செய்கிறது.

மின் துறை ஊழியா்களை அரசு ஊழியராக தொடர எவ்வித உத்தரவாதமும் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் அளிக்கப்படவில்லை.

இதனால், புதுவை மின் துறையில் பணியாற்றி வரும் நாங்கள், அரசு ஊழியா்களாக பணிக்கு வந்தோம், அரசு ஊழியா்களாகவே ஓய்வு பெற விரும்புகிறோம் என்பதை அந்தக் கூட்டத்தில் தெரிவித்து விட்டோம். போராட்டக் குழு ஏற்கெனவே எடுத்த முடிவின்படி, பிப்.1-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.