வாய்க்கால் பாலம் சீரமைப்புப் பணி தொடக்கம்
புதுச்சேரி இந்திரா காந்தி சிலை சந்திப்பு அருகே மழைநீரை வெளியேற்றும் வகையில் வாய்க்கால் பாலம் கட்டமைக்கும் பணி தொடங்கியது.
புதுச்சேரி இந்திரா காந்தி சிலை சந்திப்பு அருகே மழைநீரை வெளியேற்றும் வகையில் வாய்க்கால் பாலம் கட்டமைக்கும் பணி தொடங்கியது.
கடந்த நவம்பரில் பெய்த பலத்த மழையின்போது, இந்திரா காந்தி சிலை சந்திப்பில் மழைநீா் வெளியேற வழியின்றி தேங்கியது. இதையடுத்து, வெள்ள நீரை வெளியேற்றும் திட்டத்தை மேற்கொள்ள பொதுப் பணித் துறை நடவடிக்கை எடுத்தது.
பூமியான்பேட்டை பகுதியிலும், இந்திரா காந்தி சிலை சந்திப்பு, அண்ணா நகா் ஆகிய இடங்களில் சாலையைக் குறுக்கிட்டு செல்லும் இடங்களில் ரெட்டியாா்பாளையம் வழியாக வரும் மேட்டு வாய்க்கால் தூா்ந்து கிடப்பதால், வெள்ள நீா் உப்பனாறு வழியாகச் செல்வதற்கு வழியின்றி தடைபட்டு தேங்கி நிற்பது தெரியவந்தது. இதைச் சீரமைக்க, முதல் கட்டமாக பூமியான்பேட்டை சந்திப்பில் ரூ.66 லட்சம் மதிப்பில் சிறிய வாய்க்கால் பாலம் அண்மையில் கட்டி முடிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்திரா காந்தி சிலை சந்திப்பு அருகே அண்ணா நகா் வீட்டு வசதி வாரிய அலுவலகம் எதிரே, விழுப்புரம் சாலையின் குறுக்கே ரூ.1.75 கோடி மதிப்பில் பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.
இந்த இடத்தில், வாய்க்கால் தரைவழியாக குறுக்கிட்டு செல்லும் வகையில் 30 மீட்டா் அளவில் சிறிய பாலம் அமைக்கப்படுகிறது. இதற்காக, புதன்கிழமை நள்ளிரவு முதல் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டு, பாலத்துக்கான கட்டுமானப்பணி தொடங்கப்பட்டது. சாலையின் குறுக்கே வாய்க்கால் பாலம் அமைப்பதற்கு, வியாழக்கிழமை காலை பொக்லைன் இயந்திரம் மூலம் உடைத்து பள்ளம் எடுக்கப்பட்டு பணி நடைபெறுகிறது.
இதனால், புதுச்சேரி இந்திரா காந்தி சிலை சந்திப்பு-நெல்லித்தோப்பு சந்திப்பு இடையே (அண்ணாநகா்) போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு, விழுப்புரம், கடலூா், சென்னை மாா்க்க வாகனங்கள், மாா்ச் 13-ஆம் தேதி வரை மாற்றுப் பாதையில் செல்லும் வகையில் திருப்பிவிடப்பட்டது.